ஈரானில் நீர்த் தேக்கங்கள் வறண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு

22 ஆடி 2025 செவ்வாய் 18:53 | பார்வைகள் : 255
ஈரானில் முக்கிய நீர்த் தேக்கங்கள் வறண்டு கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் பல்வேறு பகுதிகளில், வெப்பநிலை 50 டிகிரி செல்ஷியசை தாண்டியுள்ளதாக, அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் 41 டிகிரி செல்ஷியஸ் வெயில் 21-07-2025 பதிவானதுடன், இது மேலும் உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஈரானில் வெப்ப அலை வீசி வருவதால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, அந்நாட்டின் தெற்கு பகுதி கடும் வறட்சியைச் சந்தித்துள்ளது. மேலும், தெஹ்ரானுக்கு நீர் வழங்கும் அணைகள், இந்த நூற்றாண்டிலேயே முதன்முறையாக வறண்டு காணப்படுகின்றன.
இந்த நெருக்கடியைத் தணிக்கும் முயற்சியில், தலைநகரின் சில பகுதிகளில் தண்ணீர் விநியோகத்தை அந்த நாட்டு அரசாங்கம் குறைத்துள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க உதவும் வகையில், பயன்பாட்டை 20 சதவீதம் வரை குறைக்கும்படி, தெஹ்ரான் மாகாண நீர் முகாமைத்துவ ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.