Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்...

குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கான காரணங்கள்...

4 மார்கழி 2021 சனி 15:52 | பார்வைகள் : 8984


 பெற்றோர்களிடம் இருந்து எந்தவொரு பழக்கத்தையும் புரிந்து கொள்வது குழந்தைகளுக்கு எளிதானது. பெற்றோரின் செயல்பாடுகளையும், பேசும் வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அதன்படியே செயல்படுவதற்கு முயற்சிப்பார்கள்.

 
சில குழந்தைகள் தவழ்வது, நடக்க தொடங்குவது, வார்த்தைகளை உச்சரிப்பது போன்ற குழந்தை பருவ அடிப்படை விஷயங்களில் பின் தங்கி இருப்பார்கள். மற்ற குழந்தைகளை விட தாமதமாகவே கற்றுக்கொள்ள தொடங்குவார்கள். உதாரணமாக இரண்டு வயது குழந்தை சுமார் 50 வார்த்தைகளை சொல்லலாம். 
 
இரண்டு மூன்று வாக்கியங்களை பேசுவதற்கு முயற்சிக்கலாம். அதுவே மூன்று வயதுக்குள் உச்சரிக்கும் வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமாகிவிடும். வாக்கியங்களையும் சரளமாக உச்சரிக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் 3 வயதை கடந்த பிறகும் குழந்தைகள் பேசுவதற்கு தாமதித்தாலோ, வார்த்தைகளை உச்சரிக்க சிரமப்பட்டாலோ மொழி பயிற்சியோ, மருத்துவ சிகிச்சையோ மேற்கொள்ள வேண்டியது அவசியமானது.
 
குழந்தைகளின் பேச்சு தாமதமாவதற்கு மேலும் சில காரணங்கள் இருக்கின்றன.
 
அன்கிலோக்ளோசியா: இந்த பிரச்சினை இருந்தால் நாக்கு வாயின் அடிப்பகுதியுடன் ஒட்டியிருந்து வார்த்தைகளை உச்சரிப்பதை தாமதமாக்கும். குழந்தைகளால் ஒருசில வார்த்தைகளை தெளிவாக உச்சரிக்க முடியாது. குறிப்பாக எஸ், டி, எல், ஆர், இசெட், டி.எச் போன்ற வார்த்தைகளை பேசுவது கடினமாக இருக்கும்.
 
நரம்பியல் குறைபாடுகள்: மூளையில் ஏற்படும் சில கோளாறுகள் பேச்சில் சிக்கலுக்கு வழிவகுக்கும். பெருமூளை வாதம் மற்றும் மூளை காயம் போன்ற நரம்பியல் பிரச்சினைகள் இருந்தால் மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.
 
ஆட்டிசம்: மற்றவர்களுடன் பழகுவதிலும், அவர்களுடன் பேசுவதற்கு வார்த்தைகளை உச்சரிப்பதிலும் சிக்கல்களை எதிர்கொண்டால் ஆட்டிசம் பாதிப்பு அதற்கு காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பேசுவதற்கு தாமதிப்பதற்கு ஆட்டிசமும் முக்கிய காரணமாக இருக்கிறது. ஒரே வார்த்தையை, வாக்கியங்களை மீண்டும் மீண்டும் பேசுவது ஆட்டிசம் பாதிப்புக்கான அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து பேச்சு சிகிச்சை அளித்தால் குணப்படுத்திவிடலாம்.
 
செவித்திறன் குறைபாடு: காதுகேளாமை பிரச்சினை இருந்தால் மற்றவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல் ஏற்படும். செவித்திறன் குறைபாட்டால் பேசுவதில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அதனை கவனத்தில் கொண்டு குழந்தைகளுக்கு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
 
சிகிச்சை: சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குழந்தைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையை சிறிய வயதிலேயே தொடங்க வேண்டும். பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு முன்பு குழந்தைகள் நன்றாக பேசுவதை உறுதிபடுத்திக்கொள்ளவேண்டும்.
 
ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் குழந்தைகளுடன் பேசுவதற்கு அதிக நேரம் ஒதுக்க வேண்டும். அது அவர்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும். படித்தும், பாடியும் காட்டி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கலாம். அவர்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறார்கள் என்பதை கவனமாக கேட்க வேண்டும். ஏதாவது வார்த்தைகளை பேசுவதற்கு சிரமப்பட்டால் மீண்டும் மீண்டும் அந்த வார்த்தைகளை உச்சரிக்க பழக்க வேண்டும். பொம்மைகள், விளையாட்டு பொருட்களை காண்பித்தும் பேச்சாற்றலை மேம்படுத்தலாம்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்