செம்மணி புதைக்குழியிலிருந்து பால் போத்தலுடன் மீட்கப்பட்ட குழந்தையின் எலும்புகூடு

23 ஆடி 2025 புதன் 13:51 | பார்வைகள் : 256
செம்மணி புதைக்குழியிலிருந்து குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதிகள், ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நீதிமன்றத்தால் “தடயவியல் அகழ்வாய்வுத் தளம் இல.01” மற்றும் “இல.02” என அடையாளம் காணப்பட்ட இரண்டு மனித புதைகுழிகளில் நடைபெற்று வரும் அகழ்வுப் பணிகள் 2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை 17ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வின் போது, சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டு தொகுதியுடன் மேலும் 8 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை, ஒரு பால் போச்சியை ஒத்த குழந்தை பாட்டிலும், ஆடைகளை ஒத்த துணிகளும் அகழ்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு முந்தைய தினமான திங்கட்கிழமையன்று (ஜூலை 21), 7 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன.
இதன் மூலம் கடந்த இரு தினங்களில் மொத்தமாக 15 எலும்புக்கூட்டு தொகுதிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த எலும்புகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் நாளைய தினம் (புதன்கிழமை) முறையாக அகழ்ந்து எடுக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை அகழ்வுப் பணிகள் 26 நாட்கள் தொடர்ந்துள்ள நிலையில், மொத்தம் 65 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.