மாதவிடாய் நேரத்தில் வயிறு உப்பசமாக காரணம் என்ன?
30 கார்த்திகை 2021 செவ்வாய் 05:11 | பார்வைகள் : 9799
மாதவிடாய் காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதத்தில் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். மாதவிடாய் வலி என்பது ஒரு பக்கம் பல பெண்களை தவிக்க வைத்தாலும், அதையும் கடந்து Bloating என்ற வயிறு உப்பசம் என்பது பொதுவாக பல பெண்களுக்கும் ஏற்படுகிறது. வயிறு உப்பசம் உங்களுக்கு மாதவிடாய் சுழற்சி காலம் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு அல்லது ஒரு வாரத்துக்கு முன்னர் தோன்றக்கூடும். இது உங்களை மிகவும் அசௌகரியமாக உணர செய்யும்.
உடலில் அதிகமாக நீர் தேங்குவதால் மாதவிடாய் காலத்தில் வயிறு உப்பசமாக காணப்படுகிறது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறியுள்ளனர்.
"மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்பு உடலில் உற்பத்தியாகும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகள் தான் உங்கள் உடலில் மாற்றங்களை உண்டாக்கி வயிறு உப்பசத்தை உருவாக்குகிறது" என்று ஊட்டச்சத்து நிபுணர் சிம்ரன் சோப்ரா கூறியுள்ளார். மாதவிடாய் காலத்தில் வயிறு உப்பசத்தை போக்குவதற்காக எளிய வழிமுறைகளையும், வாழ்க்கை முறை மாற்றங்களையும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
வயிறு உப்பசத்தை தவிர்க்க முதலில் நீங்கள் வழக்கமாக உண்ணும் உணவுகளில் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். உப்பு அல்லது சோடியம் அதிகமாக இருக்கும் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ப்ராசஸ்டு ஃபுட்ஸ் என்று சொல்லப்படும் பாக்கெட்டுகளில் வரும் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் (Refined Carbs) அதிகம் உள்ள உணவுகளை மாதவிடாய் காலங்களில் உண்ணக் கூடாது. வெள்ளை அரிசி, வெள்ளை சர்க்கரை, மற்றும் மைதா சேர்க்கப்பட்ட உணவுகள் உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
அதேபோல அதிகப்படியான காஃபி குடிப்பதையும், காஃபீன் நிறைந்த உணவுகள் உட்கொள்ளுவதையும் மாதவிடாய் காலத்தில் தவிர்க்க வேண்டும். இவற்றைத் தவிர்ப்பதோடு, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
மாதவிடாய் காலங்களில் வயிறு உப்பசத்தை தவிர்க்கவும், உடலில் அதிகப்படியான நீர் சேர்வதை தடுப்பதற்கும் பின்வரும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
பொட்டாசியம் என்பது ஒரு வகையான உப்பு. இந்த உப்பு உடலில் உள்ள சோடியத்தின் அளவை குறைத்து, தேவையற்ற நீரை உடலில் இருந்து வெளியேற்றுகிறது. வாழைப்பழம், அவகாடோ என்கிற வெண்ணெய் பழம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலக் கீரை மற்றும் கீரை வகைகளை உணவில் சேர்ப்பதால் உங்களுக்கு தேவையான அளவு பொட்டாசியம் சத்து கிடைக்கும்.
மாதவிடாய் காலத்தில் உங்கள் உடலுக்கு நீர் சத்தும் அதிகம் தேவைப்படும். உடலை வறண்டு போகாமல் பாதுகாக்க நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதே நேரத்தில் உடலுக்கு இயற்கையான டையூரிடிக் உணவுகளும் தேவை. டையூரிடிக் உணவுகள் சிறுநீர் உற்பத்தியை சீரமைத்து உடலில் தேங்கியிருக்கும் அதிகப்படியான நீரை வெளியேற்றுகிறது. அன்னாசி, பேரிக்காய், வெள்ளரி, இஞ்சி, பூண்டு, செலரி, தர்பூசணி ஆகியவை இயற்கையான டையூரிடிக் உணவுகள் ஆகும்.
உணவுகள் மட்டுமின்றி மிதமான உடற்பயிற்சி செய்வதும் பொதுவாக செரிமானத்தை மேம்படுத்தி, வயிறு உப்புசத்தை தடுக்கும்.