துணை ஜனாதிபதி தேர்தல்: நடைமுறைகள் துவக்கம்

24 ஆடி 2025 வியாழன் 06:43 | பார்வைகள் : 168
ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவை தொடர்ந்து, துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் துவங்கியுள்ளன. இதற்கான தேர்தலை நடத்த, தலைமை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த திங்களன்று துவங்கிய நிலையில், முதல் நாள் இரவே துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்வதாக ஜக்தீப் தன்கர் அதிரடியாக அறிவித்தார்; மருத்துவ காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறி ராஜினாமா கடிதத்தையும் அனுப்பி வைத்தார்.
செப்., 19க்குள் மறுநாள் அவரது ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்முவும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, அதற்கான அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டது.
இதையடுத்து, துணை ஜனாதிபதி பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அடுத்து, 60 நாட்களுக்குள் அந்த பதவிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, செப்., 19க்குள் புதிய துணை ஜனாதிபதி பதவியேற்க வேண்டும் என்பதால், தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் தலைமை தேர்தல் ஆணையம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.
ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தல் விதிகள் 1974ன்படி, இந்த தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதற்கான ஆலோசனைகளிலும், தேர்தல் நடத்துவதற்கான தயாரிப்பு வேலைகளிலும் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அந்த பணிகள் முடிவடைந்ததும், துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும் தேதி முறைப்படி வெளியாகும் என கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி தேர்தலில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் மட்டுமே ஓட்டளிக்க முடியும். இரு சபைகளின் நியமன எம்.பி.,க்களும் ஓட்டளிக்க தகுதி பெற்றவர்கள்.
394 ஓட்டுகள் தேவை தற்போது, 543 உறுப்பினர்கள் உடைய லோக்சபாவில், மேற்கு வங்கத்தின் பஷீர்ஹத் தொகுதிக்கான ஒரு எம்.பி., 'சீட்' மட்டும் காலியாக உள்ளது. 245 உறுப்பினர்கள் உடைய ராஜ்யசபாவில் ஐந்து எம்.பி., சீட்கள் காலியாக உள்ளன.
கடந்த மாதம் பஞ்சாப் சட்டசபைக்கு நடந்த இடைத்தேர்தலில் சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றதால், தன் ராஜ்யசபா எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். அதே போல், ஜம்மு - காஷ்மீரிலும் நான்கு எம்.பி., சீட்கள் காலியாக உள்ளன.
இதனால், இரு சபைகளிலும் மொத்தம் உள்ள எம்.பி.,க்களின் எண் ணிக்கை, நியமன எம்.பி.,க் களையும் சேர்த்து 786. இதில், துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றி பெற மொத்தம் 394 ஓட்டுகள் தேவை. அந்த வகையில் பார்த்தால், லோக்சபாவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 293 எம்.பி.,க்களும், ராஜ்யசபாவில் 129 எம்.பி.,க்களும் உள்ளனர்.
எனவே, தே.ஜ., கூட்டணி நிறுத்தும் வேட்பாளர், 422 எம்.பி.,க்களின் ஓட்டுகள் பெற்று எளிதில் வெற்றி பெற்று விடுவார்.
அடுத்தது யார்? நாட்டின் இரண்டாவது பெரிய பதவியான துணை ஜனாதிபதி பதவிக்கு, பல மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்கள் அடிபடுகின்றன. குறிப்பாக, பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக அமர வைக்க பா.ஜ., முயன்று வருவதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், ஜம்மு - காஷ்மீரின் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவின் பதவிக் காலம் வரும் ஆக., 6ம் தேதியுடன் முடிகிறது. இதனால், துணை ஜனாதிபதி பதவிக்கு அவரது பெயரும் அடிபடுகிறது.
அவரை தொடர்ந்து, டில்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்ஸேனா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஆகியோரது பெயர்களும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பெயர் பட்டியலில் இடம் பிடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.