அரசின் நிர்வாக சீர்கேடு!! மேற்கு வங்கத்தில் இருந்து வெளியேறின 6,688 நிறுவனங்கள்!

24 ஆடி 2025 வியாழன் 09:43 | பார்வைகள் : 330
கடந்த, 14 ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் இருந்து, 6,688 நிறுவனங்கள் நாட்டின் பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. 'இதற்கு, ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசின் நிர்வாக சீர்கேடே காரணம்' என, பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
கடந்த, 2011 முதல் அக்கட்சி ஆட்சியில் நீடித்து வரும் சூழலில், தொடர்ந்து 14 ஆண்டுகளாக மம்தா முதல்வராக உள்ளார். 'சாரதா சிட்பண்ட்' ஊழல், நிலக்கரி முறைகேடு, கால்நடை கடத்தல், பொது வினியோக திட்ட குளறுபடி என ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டாலும், 'ஹாட்ரிக்' முதல்வராக அவர் தொடர்கிறார்.
கண்டனம் இந்நிலையில், பார்லிமென்டின் ராஜ்யசபாவில் நேற்று முன்தினம் மத்திய கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வமான பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த, 2011, ஏப்ரல் 1 - 2025, மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில், மேற்கு வங்கத்திலிருந்து நாட்டின் பிற மாநிலங்களுக்கு 6,688 பெரு நிறுவனங்கள் தங்கள் இருப்பிடத்தை மாற்றியுள்ளன. இவற்றில், 1,308 நிறுவனங்கள் மஹாராஷ்டிராவிற்கு மாறியுள்ளன. 1,297 நிறுவனங்கள் டில்லிக்கும், 879 உத்தர பிரதேசத்திற்கும், 511 சத்தீஸ்கருக்கும், 423 குஜராத்துக்கும் இடம்பெயர்ந்துள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், 14 ஆண்டுகளில் 6,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வெளியேறியதற்கு பா.ஜ., கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் 'தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மாளவியா தன் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்ததுடன், மாநில அரசையும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதன் விபரம்:
மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை, 6,688 தொழில் நிறுவனங்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட அலுவலகங்களை மேற்கு வங்கத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு மாற்றியுள்ளன. அக்கட்சியின் ஆட்சியில், மாநிலத்தின் தொழில்துறை மோசமான சூழலில் இருப்பதையே இது உணர்த்துகிறது.
விரட்டியடிப்பு ஒரு காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான மையமாக மேற்கு வங்கம் இருந்தது. மோசமான நிர்வாகம், உறுதியற்ற கொள்கை, முதலீட்டாளர்களின் நம்பிக்கையின்மை போன்ற காரணங்களால், அங்கிருந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் விரட் டியடிக்கப்பட்டுள்ளன.
கடந்த, 2015 - 16ம் நிதியாண்டில், 869 நிறுவனங்களும், அதைத் தொடர்ந்து 2016 - 17ல், 918 நிறுவனங்களும் வெளியேறியுள்ளன. 2017 - 18ல் 1,027 நிறுவனங்கள் வெளியேறின.
மஹாராஷ்டிரா, டில்லியைத் தவிர, ராஜஸ்தான், அசாம், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்திய பிரதேசம், தமிழகம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு நுாற்றுக்கணக்கான நிறுவனங்கள் இடம்மாறியுள்ளன. இவை அனைத்தும் வெறும் எண்கள் அல்ல; வேலை இழப்பு, பொருளாதார சரிவு போன்ற பிரச்னைகளை மாநிலத்தில் ஏற்படுத்தும்.
அரசின் தவறான கொள்கைகளும், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெறாமல் போனதும், இதற்கு முக்கிய காரணம். இதனால், பொருளதார ரீதியாக மேற்கு வங்கம் பின்தங்கியுள்ளதற்கு ஆளும் திரிணமுல் காங்கிரஸ் அரசே பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்கத்தில், அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த பிரச்னை அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.