உடல் எடை குறைக்கும்போது தலைமுடி கொட்டுமா..?
22 கார்த்திகை 2021 திங்கள் 11:44 | பார்வைகள் : 9196
உடல் எடை குறைக்கும்போது உடல் தன்னை அதற்கு ஏற்ப ஒழுங்குபடுத்திக்கொள்ள முயற்சி செய்யும்போது சில பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். சில சமயங்களில் முறையாக உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.. ஏதேனும் தவறு செய்கிறீர்கள் என்றாலும் அதற்கான பக்கவிளைவுகளை அனுபவிக்கக் கூடும். அப்படி அதில் ஒரு பக்கவிளைவுதான் முடி கொட்டுதல். அப்படி முடி கொட்ட என்னதான் காரணம்..?
நீங்கள் உடல் எடையை குறைப்பில் ஈடுபடும்போது ஊட்டச்சத்து குறைபாடு இருக்கும். அதனால் மன அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிரும். நீங்கள் வேகமாக உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறீர்கள் எனில் தலைமுடியும் வேகமாக உதிரத்தொடங்கும். இது 3 முதல் 6 மாதம் வரை நீடிக்கும்.
நீங்கள் தினசரி சாப்பிடும் உணவில் மாற்றம் செய்தாலும் முடி உதிரும். அப்படி மாற்றப்பட்ட உங்கள் டயட்டில் முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இல்லை என்றாலோ அல்லது குறைந்தாலோ முடி உதிரும். உங்கள் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்றாலும் முடி உதிரும். இந்த நிலையானது உங்களுக்கு மன அழுத்தத்தையும் உண்டாக்கலாம். அதனால் சுரக்கும் ஹார்மோனும் முடி உதிர்வுக்கு வழி வகுக்கும்.இது ஆய்விலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமினோ அமிலங்கள் புரதத்தின் கட்டுமானத் தொகுதிகள் மற்றும் முடி வளர்ச்சிக்கு அவசியம். முடியின் முக்கிய ஊட்டச்சத்தான புரோட்டீன் கெரட்டின் உற்பத்திக்கு தேவைப்படுகின்றன. உங்கள் உடலுக்கு போதுமான புரதம் கிடைக்காதபோது, புரதச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. அது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். எனவே, குறைந்த கலோரி கொண்ட டயட்டை பின்பற்றுகிறீர்கள் எனில் அதில் புரதம் இல்லை என்றால், நீங்கள் முடி உதிர்வை சந்திக்கலாம்.
நீங்கள் உடல் எடையைக் குறைக்க வெயிட் லாஸ் சர்ஜரி செய்திருக்கிறீர்கள் எனில் உடல் உடனடி உடல் எடைக் குறைப்பை தாங்க முடியாமல் அதன் பக்க விளைவுகளை முடியின் காட்டும். எனவே முதலில் அது முடி உதிர்தலுக்கு வழி வகுக்கும். ஏனெனில் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்து உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு ஸிங்க் மற்றும் விட்டமின் பி12 சத்து குறைவதாகவும், அதனால் முடி உதிர்வதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
உடல் எடையை குறைக்கிறேன் என உணவை முற்றிலும் தவிர்த்தாலும் அல்லது ஊட்டச்சத்துகளே இல்லாத உணவை சாப்பிட்டாலும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக முடி உதிர்தல் உண்டாகும்.
எனவே மேலே குறிப்பிட்ட காரணங்கள் உங்களுக்கும் ஒத்துப்போகிறது எனில் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துங்கள். உடல் எடையைக் குறைத்து ஃபிட்டாக இருப்பது அவசியம்தான் என்றாலும் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்துகளும் அவசியம். ஊட்டச்சத்தில் குறைபாடு வைத்தால் இதுபோன்ற பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும். எனவே உடல் எடையைக் குறைப்பதால் முடி உதிர்கிறதே என கவலைகொள்பவர்கள் ஊட்டச்சத்து மிக்க உணவில் கவனம் செலுத்துங்கள். டயட்டை முறையாக பின்பற்றுங்கள். புரோட்டீன் முடி வளர்ச்சிக்கு அவசியம் என்பதால் அதை தவிர்க்காதீர்கள். இவற்றை பின்பற்றினாலே முடி உதிராது.