முல்லைத்தீவில் கிணற்றிலிருந்து தாயும் 2 பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு

24 ஆடி 2025 வியாழன் 15:04 | பார்வைகள் : 1167
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்திருக்கும் அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வந்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டு திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக வியாழக்கிழமை(24) மீட்கப்பட்டுள்ளனர்
உசாகரன் மாலினி( வயது 38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது 11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
குறித்த கிணற்றின் அருகில் வியாழக்கிழமை(24) அதிகாலை கான் பேக் ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் கிணற்றில் சடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்
இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் சடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது
மீட்கப்பட்ட சடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்
இவர்கள் உயிர் மாய்த்துக் கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்