அப்பல்லோவில் ஸ்டாலினுக்கு இதய பரிசோதனை!

25 ஆடி 2025 வெள்ளி 04:48 | பார்வைகள் : 182
தலைச்சுற்றல் காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, 'ஆஞ்சியோகிராம்' எனப்படும் இதயப் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது. இதில், இதயம் பாதிப்பின்றி இயல்பாக இருப்பது தெரியவந்துள்ளது. தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான ஸ்டாலின், 72, கடந்த 21ம் தேதி காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீர் தலைச்சுற்றலால் பாதிக்கப்பட்டார்; பின், சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. 'மூன்று நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்' என, மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முதல்வருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்தபோது, சீரற்ற இதயத் துடிப்பு இருந்தது தெரிய வந்தது. அதற்கு, இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
அழகிரி பார்த்தார் இந்நிலையில், நேற்று இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருக்கிறதா என்பதை அறிய, முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.
இதையொட்டி, முதல்வரின் குடும்பத்தினர் மருத்துவமனையில் தங்கி உள்ளனர். முதல்வரின் அண்ணன் அழகிரி நேற்று வந்து பார்த்து சென்றார்.
முதல்வருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக, அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் பி.ஜி.அனில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைச்சுற்றல் பிரச்னை காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நடத்தப்பட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகளில், இதயத் துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாக, இந்த தலைச்சுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜி.செங்கோட்டுவேலு தலைமையிலான மருத்துவ குழுவினர், அவற்றை சரி செய்வதற்கான சிகிச்சை அளித்தனர்.
தொடர்ந்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டதில், வேறு ஏதேனும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதயம் இயல்பாகவே உள்ளது. தற்போது முதல்வர் நலமுடன் உள்ளார்; தன் வழக்கமான பணிகளை, இரண்டு நாட்களில் மேற்கொள்வார்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நலமுடன் உள்ளார் அமைச்சர் துரை முருகன் அளித்த பேட்டியில், ''முதல்வருக்கு ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டுள்ளது; நலமுடன் உள்ளார். பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது குறித்து டாக்டர்கள் தெரிவிப்பர்,'' என்றார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டியில், ''முதல்வரை பார்க்க முடியவில்லை. மருத்துவரை சந்தித்து பேசினேன். சிறிய மருத்துவ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தமிழக மக்களின் பிரார்த்தனை காரணமாக, முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார்,'' என்றார்.
அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் நேற்று மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.