ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை வெற்றி; அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்

25 ஆடி 2025 வெள்ளி 12:48 | பார்வைகள் : 709
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது என மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., ஆலையில், 175 வகைகளில், 600 வடிவமைப்புகளில், ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நோக்கில், முதல் ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
தற்போது பணிகள் அனைத்து நிறைவடைந்து உள்ளன. பழைய ரயில் இன்ஜின்கள் நீக்கப்பட்டு புதிய ஹைட்ரஜன் ரயில் இன்ஜின்கள் பல வழித்தடங்கள் அறிமுகம் ஆக உள்ளது. இந்நிலையில், சென்னை, ஐ.சி.எப்.,யில் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் முதல் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது.
ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் வெற்றி அடைந்தது என அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ''கார்பன் வெளியேற்றத்தை குறைத்து சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக ஹைட்ரஜன் ரயில்கள் இருக்கும். ஹைட்ரஜன் ரயில் தொழில்நுட்பம் இந்தியாவை முன்னணி நாடுகளில் ஒன்றாக மாற்றும்'' என்றார்.
சிறப்பம்சங்கள் என்ன?
* ஹைட்ரஜன் ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயக்கும் ரயிலை விட, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது.
* அனல் மின் நிலையங்களில், மின்சாரம் உற்பத்தி செய்யும்போது, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதில் அந்த பிரச்னை இல்லை.
* ஹைட்ரஜன் ரயில் அதிகபட்சமாக 50 முதல் 80 கி.மீ., துாரம் வழித்தடம் வரை மட்டுமே இயக்கப்படும்.
* இந்த ரயிலில் கழிப்பறை, 'சிசிடிவி' கேமரா, தானியங்கி கதவுகள் இருக்கும். 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும் 84 பேர் பயணம் செய்யலாம்.
* ரயில் இன்ஜின் 1,200 குதிரைசக்தி திறன் கொண்டது. அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும்.