ராஜ்யசபா எம்.பி.யாக கமல் பதவியேற்பு; தமிழில் உறுதிமொழி ஏற்பு

25 ஆடி 2025 வெள்ளி 13:48 | பார்வைகள் : 788
ராஜ்யசபா எம்.பி.,யாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பதவியேற்றார். அவர் தமிழில் உறுதிமொழி ஏற்றார்.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (ஜூலை 25) காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா கூடியது. ராஜ்யசபா கூடியது, எம்.பி.,யாக கமல் தமிழில் பதவியேற்று கொண்டார். அவருக்கு ராஜ்யசபா தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இதை தொடர்ந்து, திமுகவின் வில்சன், சிவலிங்கம், சல்மா மற்றும் அதிமுகவின் இன்பதுரை, தனபால் எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டனர்.
லோக்சபா ஒத்திவைப்பு
லோக்சபா காலை 11மணிக்கு கூடியதும் பீஹார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்தார்.
இண்டி கூட்டணி போராட்டம்
இதற்கிடையே, இன்று காலை 11 மணிக்கு லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் கூடிய பிறகு, பார்லி., வளாகத்தில் இண்டி கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பீஹார் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பார்லி., வளாகத்திற்கு இண்டி கூட்டணியினர் பேரணி நடத்தினர். பேரணியில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், பிரியங்கா பங்கேற்றனர்.