உண்ணாவிரதம் இருந்தால் உடல் எடையை குறைக்க முடியுமா..?
2 கார்த்திகை 2021 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 9017
உடல் எடை குறைக்க நினைப்போருக்கு கால மாற்றத்துக்கு ஏற்ப பல வகையான எளிய முறைகள் வந்தவண்ணம் உள்ளன. கீட்டோ டயட், பேலியோ டயட், வீகன் டயட், இடைப்பட்ட உண்ணாவிரதம் முறை போன்ற பல வகையான டயட் முறைகள் புதிது புதிதாக வெளிவருகின்றன. ஆனால், இவற்றில் எது நமது உடலுக்கு சரியான பலனை தருகிறது என்பதை நாம் அறிந்துக்கொண்டு அதை கடைபிடிக்க வேண்டும்.
அந்த வகையில் எல்லோருக்கும் உடல் எடையை குறைக்க உதவக் கூடிய இடைப்பட்ட உண்ணாவிரதம் (Intermittent fasting) எனப்படும் ஒரு வகை டயட் முறை சிறந்த பலனை தருகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இது எப்படி நமது உடல் எடையை குறைக்கிறது என்பது பற்றி இனி அறிந்து கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
நாம் பல ஆண்டுகளாக கடைபிடித்து வரும் உண்ணாவிரத முறையில் இருந்து இந்த இடைப்பட்ட உண்ணாவிரத முறை சற்று மாறுபடுகிறது. உணவை எடுத்து கொள்வதற்கும், உண்ணாவிரதம் இருப்பதற்குமான சுழற்சி முறையை இது கொண்டது. 16 முதல் 14 மணி நேர உண்ணாவிரதத்திற்கு பிறகு 6-8 மணி நேர உணவு இடைவேளையில் அந்த நாளுக்கான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். 16/8 மணி நேரம், 14/10 மணி நேரம், ஒருநாள் விட்டு ஒரு நாள் உண்ணாவிரதம் என இந்த இடைப்பட்ட உண்ணாவிரத முறை பல வகையான கால இடைவேளையில் பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி செய்வதன் மூலம் பலர் அதிக எடை குறைந்திருக்கிறார்கள். மேலும் இது சர்க்கரை அளவு மற்றும் கொலஸ்ட்ராலை குறைத்து உங்களை எப்போதும் புத்துணர்வாக வைக்கும்.
எல்லோருக்கும் உதவுமா?
மிக சீக்கிரமே தனது இரவு உணவை எடுத்துக்கொள்வோர், தங்களது காலை உணவுகளை தவிர்த்து இந்த இடைப்பட்ட உண்ணாவிரத முறையை கடைபிடித்து வருகின்றனர். காலை உணவை தவிர்த்து இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ளும் சிலருக்கு வேண்டுமானால் இது எடை குறைப்பில் உதவும். ஆனால் இப்படி காலை உணவை தவிர்ப்பது எல்லோருக்கும் சரியான முறையில் எடை குறைப்பில் உதவாது என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். ஒவ்வொருவரின் உடல் தேவைக்கேற்ப இது மாறுபடும். எனவே உங்கள் உடலின் தேவை என்னவென்று அறியுங்கள்.
கிரீன் டீ , ஆப்பிள் சிடர் வினிகர், இஞ்சி தேநீர்... உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானங்களை தொடவே கூடாது
எது சிறந்த முறை?
இடைப்பட்ட உண்ணாவிரதத்தை கடைபிடிக்கும் பலர் காலை உணவை தவிர்ப்பதும் உண்டு, அதே நேரத்தில் காலை உணவை தவிர்க்காமல் பலர் எடுத்துக் கொள்கின்றனர். எனவே ஒவ்வொருவரின் உடல் நிலையை பொறுத்து காலை உணவை எடுத்துக்கொள்ள வேண்டுமா, கூடாதா என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லோரும் பின்பற்றுகிறார்கள் என்பதற்காக நாமும் அதை செய்ய வேண்டிய அவசியமில்லை.
சிலருக்கு காலை உணவை தவிர்ப்பதால் மிக கடுமையான எரிச்சல் அடைகின்றனர். அப்படிப்பட்டோர் காலை உணவு எடுத்துக்கொள்வது சிறந்தது. இரவு உணவை தாமதாக எடுத்துக்கொள்ளும் சிலருக்கு காலையில் பசி எடுக்காமல் இருக்கலாம். எனவே இவர்கள் காலை 10 மணிக்கு சாப்பிடலாம். இரவு உணவை சூரிய மறைவுக்கு முன் சாப்பிடுவது நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அப்போது தான் மறுநாள் காலையில் பசியெடுக்க கூடும்.
செய்ய வேண்டியவை :
உடல் எடை குறைக்க இடைப்பட்ட உண்ணாவிரத முறை பெரிதும் உதவுகிறது. உங்கள் உடல் எடையை குறைப்பதோடு, உடல் ஆரோக்கியத்தையும் இது மேம்படுத்தும். ஆனால் இது எல்லாருக்கும் ஒரே மாதிரி வேலை செய்வதில்லை. ஒவ்வொருவரின் உடல் அமைப்பு, உடல் நிலை, உடலின் தேவையை பொறுத்து இந்த இடைப்பட்ட உண்ணாவிரதம் அவர்களின் உடலில் எடை குறைப்பை செய்கிறது.
எனவே, மற்றவர்கள் செய்வதை நீங்கள் அப்படியே செய்யாமல் உங்களுக்கு எது உதவுகிறதோ அதை கடைபிடிப்பது சிறந்த முறையில் உடல் எடையை குறைக்க உதவும்.