பரிஸ் ஒலிம்பிக் பலூனில் காட்சிப்படுத்தப்பட்ட "காசா இன அழிப்பை நிறுத்துங்கள்" வாசகம்!!!

27 ஆடி 2025 ஞாயிறு 13:41 | பார்வைகள் : 265
பரிஸ் ஒலிம்பிக் பலூன் மீது "காசாவில் இன அழிப்பை நிறுத்துங்கள்" என்ற வாசகத்தை அம்னஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International) ஜூலை 26 சனிக்கிழமை இரவு லேசர் ஒளி மூலம் காட்டியுள்ளது. இது பரிஸ் 2024 ஒலிம்பிக் தொடக்கத்தின் ஒராண்டு நிறைவையொட்டி நடைபெற்றது.
Rue de Rivoli எனும் தெருவிலுள்ள ஒரு கட்டிடத்தில் இருந்து லேசர் ஒளியில் சுமார் 30 மீட்டர் உயரத்தில் இந்த வாசகம் பறந்த ஒலிம்பிக் பலூன் மீது ஒளிர்ந்தது. இரவு 10:30க்கு பிறகு இது காட்சியளித்தது. அதனைப் பார்த்த மக்கள் மற்றும் அதிகாரிகள் ஆச்சரியமடைந்தனர்.
இஸ்ரேல் காசாவில் பசியை ஒரு போர் ஆயுதமாக பயன்படுத்துவதை அம்னஸ்டி குற்றம் சாட்டுகிறது, இது ஒரு போர் குற்றம் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீனில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயர நிலையை உலகம் விட்டு விலகாமல் கவனிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அதே நேரத்தில், பிரான்ஸ் செப்டம்பரில் பாலஸ்தீனை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அம்னஸ்டி, பிரான்ஸ் வார்த்தைகளை விட செயலில் இறங்க வேண்டும் என கூறியுள்ளது.
காசா பகுதியில் நிலவும் கடும் பசியைத் தொடர்ந்து, இஸ்ரேல் ஜூலை 26 அன்று வான்வழியாக நிவாரணம் அளித்தமை மற்றும் நாள்தோறும் ஒரு மனிதாபிமான இடைநிறுத்த்தை அறிவித்துள்ளது.