சீனாவில் பெற்றோருக்கு பணம் வழங்கும் அரசாங்கம்...!

29 ஆடி 2025 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 283
சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவரும் சூழ்நிலையில், அந்நாட்டு அரசாங்கம் 3 வயதிற்குக் குறைவான ஒவ்வொரு குழந்தைக்கும் வருடத்திற்கு 3,600 யுவான் (500டொலர்) நிதியுதவி வழங்கும் நாடு தழுவிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் 2 கோடிக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைவதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த ஒரு தசாப்தமாக சீனாவின் ஒரே குழந்தை கொள்கை நீக்கப்பட்ட போதிலும், பிறப்பு விகிதம் தொடர்ந்து வீழ்ச்சியடைந்துவருகிறது.
ஒரு குழந்தைக்கு மொத்தமாக 10,800 யுவான் வரை பெற வாய்ப்பு உள்ளதாகவும், இந்த திட்டம் 2024 ஜனவரி முதல் அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 முதல் 2024 வரை பிறந்த குழந்தைகளுக்கும் பகுதி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முந்தைய மாதங்களில் சீனாவின் பல பகுதிகள் குழந்தைப் பிறப்புகளை ஊக்குவிக்க ஏற்கனவே தனிப்பட்ட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, ஹொஹொட் நகரம் மூன்று குழந்தைகள் உள்ள தம்பதிகளுக்கு ஒரு குழந்தைக்கு 100,000 யுவான் வரை வழங்குகிறது.
பெய்ஜிங்கிற்கு வடகிழக்கே உள்ள ஷென்யாங் நகரம் மூன்றாவது குழந்தைக்கு மாதம் 500 யுவான் வழங்கி வருகிறது.
2024ல் சீனாவில் 9.54 மில்லியன் குழந்தைகள் பிறந்ததாக தேசிய புள்ளிவிவர அலுவலகம் தெரிவித்தது.
இது கடந்த ஆண்டைவிட சிறிய உயர்வாக இருந்தாலும், மொத்த மக்கள் தொகை தொடர்ந்தும் குறைந்துள்ளது.