இந்திய அணியின் தொடர் டெஸ்ட் தோல்வி எதிரொலி - பயிற்சியாளரை மாற்ற உள்ள பிசிசிஐ

29 ஆடி 2025 செவ்வாய் 14:01 | பார்வைகள் : 130
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குழுவில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் 2024 டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்த பின்னர், கவுதம் கம்பீர் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அவருக்கு தேவையான உதவி பயிற்சியாளர்களை அவரே தேர்வு செய்து கொள்ள பிசிசிஐ அதிகாரம் வழங்கியது.
அதன்படி, பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் தென்ஆப்பிரிக்கா வீரர் மோர்னே மோர்க்கெல்(Morne Morkel), உதவி பயிற்சியாளர்களாக அபிஷேக் நாயர் மற்றும் யான் டென் டோஸ்கேட்(Ryan Ten Doeschate) நியமித்தார்.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர், 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிட்டுள்ள இந்திய அணி, 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 8 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டி டிராவிலும் முடிந்துள்ளது.
நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முதல் முறையாக இழந்தது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோற்று பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பறிகொடுத்தது.
இதன் காரணமாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் இந்திய அணியால் தகுதி பெற முடியாமல் போனது. இதனையடுத்து, உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
தற்போது இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையில் விளையாடி வருகிறது.
4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், 2 போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளது. 4வது போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.
இதன் காரணமாக, பயிற்சியாளர் மீது பிசிசிஐ அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்க்கெல் மற்றும் உதவி பயிற்சியாளர் யான் டென் டோஸ்கேட் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்து தொடருக்கு பின்னர், செப்டம்பர் 9 முதல் 28 ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளஆசிய கோப்பையில், இந்திய அணி விளையாட உள்ளது.
இதனிடையே புதிய பயிற்சியாளரை நியமிக்க கால அவகாசம் இல்லாத நிலையில், ஆசிய கோப்பை தொடருக்கு பின்னர் இருவரும் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அதேவேளையில், கம்பீர் தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார் என கூறப்படுகிறது.