Paristamil Navigation Paristamil advert login

லலித் - குகன் வழக்கு - யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் என அறிவித்த கோட்டாபய

லலித் - குகன் வழக்கு - யாழ் சென்று சாட்சியமளிக்க தயார் என அறிவித்த கோட்டாபய

30 ஆடி 2025 புதன் 13:50 | பார்வைகள் : 349


 

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (30) உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான மேன்முறையீட்டு மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

எவ்வாறாயினும், தற்போதுள்ள பாதுகாப்பு காரணங்களுக்காக தமது கட்சிக்காரர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் சாட்சியமளிப்பதற்கு பதிலாக கொழும்பு நீதிமன்றமொன்றில் சாட்சியமளிக்கத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி இன்று நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.

இதன்போது. மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த கோரிக்கையை இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, பொருத்தமான உத்தரவுகளைப் பெற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வாவுக்கு அறிவித்தது.

மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி நுவான் போபகேவும் அந்தக் கோரிக்கைக்கு தமது இணக்கத்தை தெரிவித்தார்.

அதன்படி, மேன்முறையீட்டு மனுவின் விசாரணையை நிறைவு செய்வதற்கு நீதியரசர்கள் குழாம் தீர்மானித்தது.

2011 டிசம்பர் 9 ஆம் திகதி லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவொன்று தாக்கல் செய்யயப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சாட்சியமளிக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்திருந்த கோட்டபய ராஜபக்ஷவுக்கு, 2019 ஆண்டு அறிவித்தல் அனுப்பப்பட்டது.

எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக சாட்சியமளிக்க யாழ்ப்பாணம் நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது எனக் கூறி, குறித்த அறிவித்தல் அனுப்பும் முடிவுக்கு எதிராக கோட்டபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க கோட்டபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட அறிவித்தலை இரத்துச் செய்திருந்தது.

இந்நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பை இரத்துச் செய்யக் கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள், உயர் நீதிமன்றத்தில் இந்த மேன்முறையீட்டைத் தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்