Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இலஞ்சம் பெற்ற 34 பேர் கடந்த 6 மாதங்களில் கைது

இலங்கையில் இலஞ்சம் பெற்ற 34 பேர் கடந்த 6 மாதங்களில் கைது

31 ஆடி 2025 வியாழன் 13:08 | பார்வைகள் : 247


இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் 34 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூன் 30 ஆம் திகதி வரை 3,022 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலகட்டத்தில் 54 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, 34 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களில் இலங்கை பொலிஸ் துறையைச் சேர்ந்த 10 அதிகாரிகள், நீதி அமைச்சின் ஐந்து அதிகாரிகள், சுகாதார அமைச்சின் இரண்டு அதிகாரிகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையைச் சேர்ந்த இரண்டு அதிகாரிகள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வருடத்தின் முதல் 6 மாதங்களில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்களில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தில் இலஞ்சம் கோரிய சம்பவங்கள் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 60 சந்தேக நபர்களுக்கு எதிராக 50 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், குறித்த காலப்பகுதியில் 6 வழக்குகள் நிறைவடைந்துள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் இலஞ்சம் பெற்றமை தொடர்பாக 273 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் போதைப்பொருள் குற்றங்களுக்காக 122,913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது 928 கிலோ ஹெரோயின் போதைப்பொருள், 1,396 கிலோ ஐஸ், 27 கிலோ கொக்கெய்ன், 381 கிலோ ஹாஷிஷ் மற்றும் 11,192 கிலோ கஞ்சா ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் முப்படையினர் இணைந்து நடத்திய விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் 948 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று துப்பாக்கிகளும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்