Paristamil Navigation Paristamil advert login

தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலை குறைக்க அமலாகிறது புதிய திட்டம்!

தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலை குறைக்க அமலாகிறது புதிய திட்டம்!

1 ஆவணி 2025 வெள்ளி 06:53 | பார்வைகள் : 170


நகர்ப்புற பகுதிகளை ஒட்டிய தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலை குறைக்க, புறவழிச் சாலைகள் அமைப்பதற்கான புதிய திட்டம் குறித்து, மாநில அரசுகளிடம் கருத்து கேட்கும் பணியை மத்திய அரசு துவக்கிஉள்ளது.

நாடு முழுதும் சீரான போக்குவரத்தை உறுதி செய்ய, தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. வாகனங்களின் எண்ணிக்கை அடிப்படையில், பல்வேறு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன.

இவற்றில், 10 லட்சத் துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள நகரங்களில் மட்டுமே, தேசிய நெடுஞ்சாலை நெரிசலுக்கு தீர்வாக, புதிய புறவழிச் சாலைகள் அமைக்கப்படுகின்றன.

ஆனால், இதற்கு அடுத்தபடியாக, 5 லட்சம் மக்கள்தொகை உள்ள சிறிய நகரங்களில் தற்போது நெரிசல் அதிகரித்து வருகிறது.

பல பிரச்னைகள் இது போன்ற சிறிய நகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, பெரிய அளவிலான திட்டங்களை செயல்படுத் துவதில், பல்வேறு பிரச்னை கள் எழுகின்றன.

குறிப்பாக, இது போன்ற நகரங்களில் புதிய புறவழிச் சாலைகள் அமைப்பதற்கான நிதி திரட்டுவது, மாநில அரசுகளுக்கு சவாலாக அமைந்துள்ளது.

இந்நிலையில், சிறிய நகரங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் நெரிசலை குறைப்பதற்கான புதிய திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

இது குறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

தேசிய நேடுஞ்சாலையை ஒட்டியுள்ள சிறிய நகரங்களில் நெரிசலை குறைக்க, புதிய திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி உள்ளது.

வளர்ச்சி பணிக்கு தடை இது தொடர்பாக வரைவு அறிக்கையை, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ளது.

நாடு முழுதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகையுடன், 191 நகரங்கள், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளன. இதில், 5 லட்சம் மக்கள்தொகையுடன், 83 நகரங்கள் வருகின்றன.

இதில், 80 நகரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தெரிய வந்துள்ளது. இதில், 32 நகரங்களில் புதிய புறவழிச்சாலைகள் அமைக்க வேண்டிய தேவை உள்ளது; 48 நகரங்களில் சாலை சந்திப்புகளில் நெரிசல் குறைப்பு நடவடிக்கை தேவைப்படுகிறது.

குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலையையொட்டி இரண்டு பக்கத்திலும், தலா 50 அடி வரை வளர்ச்சி பணிகளை தடை செய்வது. உள்ளூர் சாலைகள் இணையும் இடங்களில், 2 கி.மீ., வரை சாலைகளை அகலப்படுத்துவது போன்ற வழிமுறைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதில், சிறு நகரங்களில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில், நெரிசலை குறைக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான செலவை, மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ளும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது. அதன் அடிப்படையில் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்