இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்க துருக்கி முடிவு...

29 ஆவணி 2025 வெள்ளி 15:43 | பார்வைகள் : 191
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டித்து வான்வெளியை மூடுவதாக துருக்கி வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
துருக்கி, இஸ்ரேல் இடையே 1997ஆம் ஆண்டு முதல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் உள்ளது. இதில் எஃகு, எண்ணெய் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவை முக்கிய வர்த்தக பொருட்கள் அடங்கும்.
ஆனால், காஸாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி செல்ல அனுமதிக்கும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக கடந்த ஆண்டு மே மாதம் துருக்கி கூறியது.
இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் துருக்கி முற்றிலும் துண்டிக்க முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹக்கன் ஃபிடன் (Hakan Fidan) இதுகுறித்து கூறுகையில், இஸ்ரேலுடனான அனைத்து பொருளாதார மற்றும் வணிக உறவுகளையும் துண்டித்து, இஸ்ரேலிய விமானங்களுக்கு அதன் வான்வெளியை துருக்கி மூடும் என்றார்.
மேலும், பாராளுமன்றத்தின் அமர்வில் உரையாற்றிய ஃபிடன், "காஸா, லெபனான், ஏமன், சிரியா, ஈரான் மீதான இஸ்ரேலின் பொறுப்பற்ற தாக்குதல்கள் சர்வதேச ஒழுங்கை மீறும் ஒரு பயங்கரவாத அரசு மனநிலையின் தெளிவான அறிகுறியாகும்" என தெரிவித்தார்.
துருக்கி, இஸ்ரேல் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 2023யில் கிட்டத்தட்ட 6.8 பில்லியன் டொலர்களாக இருந்தது. இதில் 75 சதவீதத்திற்கும் அதிகமானவை துருக்கிய ஏற்றுமதிகள் ஆகும் என துருக்கிய புள்ளியியல் நிறுவன தமது தரவுகளில் கூறியது.