துபாய் முதலீடு என்ன ஆனது? அரசுக்கு அண்ணாமலை கேள்வி

30 ஆவணி 2025 சனி 04:48 | பார்வைகள் : 101
கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் வேலை வாய்ப்பு வளர்ச்சி அப்படியே உள்ளது' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: 'பேட்ச் வொர்க்' மாடல் முதல்வர் ஸ்டாலினுக்கு, சில புள்ளி விபரங்களை நினைவூட்ட விரும்புகிறேன். கடந்த 2020 - 21 ஆண்டின் தொழில்துறை கணக்கெடுப்பின்படி, முதல் ஐந்து மாநிலங்களின் பங்கானது, தமிழகம் 15; குஜராத் 12.7; மஹா ராஷ்டிரா 12.3; உத்தரப்பிரதேசம் 6.8; கர்நாடகா 6.2 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
இதில், உத்தர பிரதேசத்தில் வேலைவாய்ப்பின் வளர்ச்சி 1.2, மஹாராஷ்டிராவில் 0.7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2020-21 போல், 2023 - 24ம் ஆண்டிலும், வேலைவாய்ப்பின் பங்கு அப்படியே உள்ளது.
பெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட 6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது; தொழில் துறை பதிவுகளில் அது எங்கு உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், ஐ.இ.எம்., அதாவது, தொழில் துறை தொழில் முனைவோர் மெமொரண்டம் வாயிலாக, தமிழகத்திற்கு 37,307 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.
அதே நேரத்தில், குஜராத்திற்கு 2,89,110 கோடி; மஹாராஷ்டிராவுக்கு 1,65,655 கோடி; உத்தர பிரதேசத்திற்கு 56,900 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது. பிற மாநிலங்கள் எல்லாம் முதலீடு மற்றும் வேலை வாய்ப்பில் முன்னேறிக்கொண்டிருக்க, தமிழகம் பின் தங்கி உள்ளது.
ஆனால், கடந்த கால பெருமைகளை பேசுவதில், தி.மு.க., அரசு கவனம் செலுத்தி வருகிறது; மாநிலத்தின் எதிர்காலம் குறித்த, தொலை நோக்கு பார்வையை இழந்து விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.