Paristamil Navigation Paristamil advert login

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்

தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்

30 ஆவணி 2025 சனி 09:47 | பார்வைகள் : 246


தொலைபேசி உரையாடல் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சையை அடுத்து, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை அவரது பதவியிலிருந்து நீக்குமாறு அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாய்லாந்துக்கும், கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில், தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருந்தார். 

இந்த உரையாடலின் போது, தாய்லாந்து இராணுவத் தளபதியை விமர்சிக்கும் வகையில் அவர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்த உரையாடல் பதிவு கசிந்ததால் தாய்லாந்தில் பெரும் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. மே 28 ஆம் திகதி கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையை அவர் கையாண்ட விதம் குறித்துப் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி வலுத்தது. பிரதமர் ஷினவத்ரா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி தலைநகர் பாங்கொக்கில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, தாய்லாந்து அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது. தற்போது, அவரது பதவியை நிரந்தரமாக நீக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவையை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்.

தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து ஷினவத்ரா கூறுகையில், "பிரச்சினைகளைத் தவிர்க்கவும், ஆயுத மோதலைத் தவிர்க்கவும், இராணுவ வீரர்கள் எந்த இழப்பையும் சந்திக்காமல் இருக்கவும் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே நான் யோசித்தேன். 

ஒரு தலைவரிடம் நான் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய விடயங்களைச் சொல்வதென்றால், அதை ஏற்றுக்கொள்ள முடியாது," என்று தெரிவித்திருந்தார்.

பேடோங்டர்ன் ஷினவத்ராவின் குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் இதற்கு முன்னர் இராணுவம் அல்லது நீதித்துறையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, ஒரு பெரும் கோடீஸ்வரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷினவத்ரா பதவி நீக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்தின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்