Paristamil Navigation Paristamil advert login

கென்யாவில் யானைக்கு பியர் அருந்தக் கொடுத்த சுற்றுலா பயணி

கென்யாவில் யானைக்கு பியர் அருந்தக் கொடுத்த சுற்றுலா பயணி

30 ஆவணி 2025 சனி 09:47 | பார்வைகள் : 117


கென்யாவில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவர் யானையின் தும்பிக்கையில் பியரை ஊற்றி அருந்தக் கொடுக்கும் வீடியோகளை வெளியிட்டுள்ளார்.

 

இந்நிலையில், இது தொடர்பில் சமூக ஊடகங்களில் சர்ச்சை வெடித்ததை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

குறித்த சுற்றுலா பயணி வனவிலங்கு சரணாலயத்தில் பிரபலமான 'டஸ்கர்' (Tusker) பியரை குடித்துவிட்டு, மீதமுள்ளதை யானைக்குக் கொடுப்பது போல் படமாக்கப்பட்டு "தந்தம் உள்ள நண்பனுடன் ஒரு டஸ்கர் பியர்," என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

 

 

இதனை அவதானித்த கென்யர்கள் எதிர்ப்பை வெளியிட்டதை தொடர்ந்து அந்த பதிவு அவரது கணக்கிலிருந்து நீக்கப்பட்டது.

 

 

பிபிசி இந்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து, அதன் உண்மை தன்மையை உறுதிப்படுத்தியது. நிலப்பரப்பு மற்றும் நன்கு அறியப்பட்ட ஆண் யானை ஆகியவற்றை வைத்து, இது மத்திய மாகாணமான லைக்கிபியாவில் உள்ள 'ஓல் ஜோகி' (Ol Jogi) சரணாலயத்தில் படமாக்கப்பட்டிருக்கலாம் என சுட்டிக்காட்டுகிறது.

 

கென்யா வனவிலங்கு சேவை (KWS) மற்றும் சரணாலய நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன. அந்த நபர் விதிகளை மீறியுள்ளதாகவும், இது போன்ற செயல்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் சரணாலய ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

 

குறித்த நபர், மற்றொரு சரணாலயத்தில் காண்டாமிருகத்தைத் தொட்டு உணவளிக்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார், இதுவும் விதிகளுக்கு எதிரானது. இந்த நடத்தை அந்த நபரின் உயிருக்கும், விலங்குகளின் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்தில் மாசாய் மாராவில் சுற்றுலாப் பயணிகள் காட்டு விலங்குகளின் இடப்பெயர்ச்சிக்கு இடையூறு செய்த சம்பவத்தைத் தொடர்ந்து, கென்ய சுற்றுலா அமைச்சு வனவிலங்கு பூங்காக்களில் கடுமையான விதி முறைகளை அறிவித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்