இலங்கையர்களுக்கு இரத்த நிலவை காணும் வாய்ப்பு

31 ஆவணி 2025 ஞாயிறு 15:38 | பார்வைகள் : 1005
வானியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரிய நிகழ்வு, 'ஃப்ளட் மூன்'. 2025 செப்டம்பர் 7 அன்று நிகழும் மொத்த சந்திர கிரகணத்தால் நிலவு ஆழ்ந்த சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.
2025 செப்டம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில், வானில் கண்கவர் நிகழ்வாக, நிலவு ஆழ்ந்த ரத்தச் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்க உள்ளது. இது, ஃப்ளட் மூன் என அழைக்கப்படும் முழுமையான சந்திர கிரகண நிகழ்வு.
முழு சந்திர கிரகணம் நிகழும்போது, பூமி சரியாகச் சூரியனுக்கும் முழு நிலவுக்கும் இடையே வரும். இதனால், பூமியின் இருண்ட நிழல் (umbra) நிலவின் மீது முழுமையாகப் படர்ந்துவிடும். சூரிய கிரகணத்தைப் போல நிலவு முற்றிலும் இருண்டு போகாது. மாறாக, பூமியின் வளிமண்டலம் வழியாகச் சூரிய ஒளி வளைந்து செல்வதால், நிலவு சிவந்த நிறத்தில் ஒளிரும். இந்தச் சிவந்த நிறத்திற்குப் பின்னால் 'ரேலே சிதறல்' (Rayleigh scattering) என்ற அறிவியல் நிகழ்வு உள்ளது. சூரியன் உதயமாகும்போதும், அஸ்தமிக்கும்போதும் வானம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களில் தோன்றுவதற்கும் இதுவே காரணம்.
சூரிய ஒளி பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது, காற்று மூலக்கூறுகளால் சிதறடிக்கப்படுகிறது. இதில், நீலம், ஊதா போன்ற குறுகிய அலைநீளங்கள் கொண்ட ஒளி சிதறிவிடும். ஆனால், சிவப்பு, ஆரஞ்சு போன்ற நீண்ட அலைநீளங்கள் கொண்ட ஒளி, வளிமண்டலம் வழியே வளைந்து நிலவைச் சென்றடைகிறது. இதன் காரணமாகவே, கிரகணத்தின்போது நிலவு செம்பு, ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்தில் மின்னுகிறது.
செப்.7-ஆம் திகதி நிகழும் சந்திர கிரகணம் மிகவும் முக்கியமானது. ஏனெனில், இதன் முழுமையான நிலை சுமார் 82 நிமிடங்கள் நீடிக்கும். இது சமீப காலத்தில் காணப்பட்ட மிக நீண்ட சந்திர கிரகணங்களில் ஒன்றாகும். இந்த அற்புதமான நிகழ்வை ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் காணலாம். மேலும், உலகின் சுமார் 87% மக்கள் இந்த வானியல் அதிசயத்தை நேரடியாகக் காண வாய்ப்புள்ளது.
சராசரியாக 2.5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மொத்த சந்திர கிரகணங்கள் நிகழ்ந்தாலும், இவ்வளவு நீண்ட கால அளவிலும், பரந்தளவில் தெரியும் கிரகணங்கள் மிகவும் அரிது. எனவே, இது வானியல் ஆர்வலர்களுக்கு சிறந்த வாய்ப்பு.
கண்கவர் 'இரத்த நிலவை' காணும் அரிய வாய்ப்பு இலங்கையர்களுக்குக் கிடைக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைத் தலைவரும், ஆர்தர் சி. கிளார்க் நவீன தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவருமான பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்தார்.