Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்! அ.தி.மு.க.,வில் இணையும் முயற்சி பலிக்காததால் தவிப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்! அ.தி.மு.க.,வில் இணையும் முயற்சி பலிக்காததால் தவிப்பு

1 புரட்டாசி 2025 திங்கள் 07:12 | பார்வைகள் : 172


மதுரையில் வரும் 4ம் தேதி, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் மாநில மாநாடு நடக்கும்' என, அதன் ஒருங்கிணைப்பாளரான முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். ஆனால், அந்த மாநாட்டை ஒத்தி வைப்பதாக நேற்று அவர் தெரிவித்ததால், அவரின் ஆதரவாளர்களும், அவரை நம்பியுள்ள அ.தி.மு.க., தொண்டர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அத்துடன், அ.தி.மு.க.,வில் மீண்டும் இணையும் பன்னீர்செல்வத்தின் முயற்சி பலன் அளிக்காததாலும், அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமியிடமே நேரடியாக சரணடைந்து, தங்களை இணைத்து கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின், அ.தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்ட போட்டியை தொடர்ந்து, பொதுக்குழுவை கூட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்களை நீக்கியதுடன், இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த பழனிசாமி, கட்சியின் பொதுச்செயலரானார்.

இதையடுத்து, 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு' என்ற பெயரில், தன் ஆதரவாளர்களுடன் தனித்து இயங்கி வருகிறார் பன்னீர்செல்வம். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினர் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என குரல் எழுப்பி வரும் பன்னீர், அதற்காக சட்ட ரீதியில் அ.தி.மு.க., தலைமைக்கு நெருக்கடி கொடுத்தும் வருகிறார்.

பிரிந்து சென்றது


ஆனால், அதை கண்டுகொள்ளாத பழனிசாமி, 'பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா உள்ளிட்டோரை எக்காரணம் கொண்டும், மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைக்க மாட்டோம்' என, தொடர்ந்து கூறி வருகிறார்.

கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன், பா.ஜ., கூட்டணியில் இருந்து அ.தி.மு.க., பிரிந்து சென்றது. இந்நிலையில், தன் ஆதரவாளர்களுடன் பா.ஜ., பக்கம் சென்றார் பன்னீர்செல்வம். ராமநாதபுரம் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வத்துக்கு 'சீட்' ஒதுக்கப்பட, பலாப்பழம் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இதனால், 'மீண்டும் அ.தி.மு.க.,வில் இணைய, அவருக்கு வாய்ப்பு கிடைக்கும்' என, அவரது ஆதரவாளர்கள் நம்பினர். ஆனால், பழனிசாமி தன் முடிவில் உறுதியாக இருந்தார்; அது மட்டுமின்றி, பா.ஜ.,வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து விட்டார்.

இதனால், பா.ஜ., கூட்டணியில் பன்னீர்செல்வத்தின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. அவர் குறித்து பா.ஜ., எந்த முடிவும் அறிவிக்காத நிலையில், 'அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்கு முன், ஏதாவது ஒரு முடிவை எடுக்க வேண்டும்' என, பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுக்கத் துவங்கினர்.

கடும் கோபம்

இதையடுத்து, கடந்த ஜூலையில் சென்னையில் தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் மாவட்ட செயலர்கள் கூட்டத்தை பன்னீர் கூட்டினார். அப்போது எடுக்கப்பட்ட முடிவின்படி, தன் செல்வாக்கை காட்ட, அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில், வரும் 4ம் தேதி மதுரையில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அறிவித்தார்.

இந்நிலையில், வரும் 4ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த மாநாட்டை ஒத்தி வைப்பதாக பன்னீர்செல்வம் நேற்று அறிக்கை வெளியிட்டார். அவரின் அறிவிப்பு, ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:

பன்னீரின் ஆதரவாளர்களாக நாங்கள் அடையாளப்படுத்தப்பட்டு விட்டதால், அவரோடு இணைந்தே கட்சியை ஒருங்கிணைக்கலாம் என்ற நம்பிக்கையில், அவர் பின்னால் தொடர்ந்தோம்.

ஆனால், எந்த நடவடிக்கையிலும் அவர் உறுதியாக இல்லை; அறிவிக்கப்பட்ட மாநாட்டையும், எவ்வித காரணமும் சொல்லாமல் ஒத்தி வைத்திருக்கிறார்.

ஒத்தி வைப்பதும், ரத்து செய்வதும் ஒன்று தான். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற தகவலும் இல்லை. எந்த முடிவையும் உறுதியாக எடுக்காமல் காலம் கடத்துவது, எங்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது.

அதனால், அ.தி.மு.க.,வில் நேரடியாக இணைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பழனிசாமியை சந்திக்கவும் தீர்மானித்து உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்