Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் போரை நிறுத்த இந்தியா மீது வரி தேவைதான்! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

உக்ரைன் போரை நிறுத்த இந்தியா மீது வரி தேவைதான்! அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் வாதம்

5 புரட்டாசி 2025 வெள்ளி 06:37 | பார்வைகள் : 190


உக்ரைனில் போரை நிறுத்துவதற்காகவே, இந்தியாவுக்கு வரி விதிக்கும் தேவை ஏற்பட்டது' என, அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் டிரம்ப் நிர்வாகம், கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவுக்கு இரண்டு காரணங்களுக்காக 50 சதவீத வரி விதித்துள்ளார். அமெரிக்காவுக்கு இந்திய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் அளவுக்கு, தங்களிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்வதில்லை. இதனால் மிகப்பெரிய வர்த்தக பற்றாக்குறை நிலவுகிறது என்று முதல் காரணம் கூறப்பட்டது.

இரண்டாவதாக, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், அந்த நிதியை பயன்படுத்தி கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுடனான போரை ரஷ்யா நீட்டித்து வருகிறது என டிரம்ப் குற்றம்சாட்டினார். இந்த இரண்டாவது காரணத்துக்காக, இந்தியா மீது கூடுதலாக 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. கூடுதல் வரியும் அமலுக்கு வந்துவிட்டது.

இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு மட்டுமல்ல, இந்திய தயாரிப்புகளை நம்பி தொழில் செய்யும் ஏராளமான அமெரிக்க தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அதிபர் டிரம்பின் உத்தரவை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'வரி விதிப்பு உத்தரவுகள் அமெரிக்க அதிபரின் அதிகாரத்தை மீறியவை' என்று உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து, 'பெடரல் சர்க்யூட்' எனப்படும் சிறப்பு நீதிமன்றத்தை டிரம்ப் அரசு நாடியது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அக்., 14 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி, டிரம்ப் அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில், 251 பக்க மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது:

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் அமெரிக்காவில் தேசிய அவசர நிலை ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க பல லட்சம் கோடி ரூபாயை நாம் செலவு செய்கிறோம்.

எனவே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை வாங்குவதற்காக இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகாரங்கள் சட்டப்படி அதிபர் டிரம்ப் வரி விதித்தார். இந்த வரி விதித்ததன் முக்கிய நோக்கம், உக்ரைனில் அமைதியை கொண்டு வருவதாகும்.

இந்த வழக்கு அமெரிக்காவின் நலனுக்கு மிகவும் முக்கியமானது. வரி விதிக்கும் அதிகாரத்தை மறுத்தால், அமெரிக்கா பாதுகாப்பு இல்லாமல் வர்த்தக பதிலடிக்கு ஆளாகும். இதனால் நாடு பொருளாதார அழிவின் விளிம்புக்கு தள்ளப்படும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்