Paristamil Navigation Paristamil advert login

ஹீரோவாக சாதித்தாரா பாலா?

ஹீரோவாக சாதித்தாரா பாலா?

5 புரட்டாசி 2025 வெள்ளி 17:03 | பார்வைகள் : 199


மூத்த ஜோடியான காந்தி மற்றும் கண்ணம்மா அறுபதாம் கல்யாணம் ஒன்றிற்கு செல்கின்றனர். அந்த கல்யாணத்தை பார்த்த கண்ணம்மாவுக்கு நமக்கு ஒரு பிள்ளை இருந்திருந்தா இதுபோல் நமக்கும் ஒரு திருமணம் செய்து வைத்திருப்பான் என காந்தியிடம் ஃபீல் பண்ணுகிறார். காந்தியின் உலகமே கண்ணம்மா தான், அவரின் ஆசையை நிறைவேற்ற முடிவெடுக்கிறார் காந்தி. இதற்காக ஊரில் இருக்கும் தனக்கு சொந்தமான ஜமீன் சொத்தை விற்று 80 லட்சம் பணத்தை ஏற்பாடு செய்கிறார்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கல்யாணத்திற்கான A டூ Z வேலைகளை செய்யும் இளம் காதல் ஜோடியான கதிர் மற்றும் கீதாவை சந்தித்து தனது அறுபதாம் கல்யாண விழாவுக்கு ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். அவர்களும் அதற்கான வேலைகளில் இறங்குகின்றனர் அப்போது ஒரு சிக்கல் வருகிறது. இதனால் அறுபதாம் கல்யாணம் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தடைகளை மீறி அந்த கல்யாணம் நடந்ததா? இல்லையா? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

மூத்த தம்பதியராக காந்தி, கண்ணம்மா கதாபாத்திரத்தில் பாலாஜி சக்திவேல் மற்றும் அர்ச்சனா நடித்திருக்கிறார்கள். அவர் நடித்துள்ளார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். காமெடி வேடங்களில் மட்டும் நடித்து வந்த பாலா இப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்திலேயே நியாயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து இருக்கிறார்.

கிளைமாக்ஸில் நடு ரோட்டில் பாலா ஆடும் ஆட்டம் கண்களை குளமாக்குகிறது. கதாநாயகியாக நமிதா கிருஷ்ணமூர்த்தி, தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை அழகு பதுமையோடு சிறப்பாக செய்துள்ளார். மோடி தலைமையிலான அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு உத்தரவு மக்களை எந்த மாதிரி வாட்டி வதைத்தது என்பதை மீண்டும் கண் முன் கொண்டு வந்திருக்கிறது இந்த காந்தி கண்ணாடி. இப்படத்தில் நாளடைவில் எதிர்ப்புகளும் வர வாய்ப்பு இருக்கிறது.

அமுதவாணன், மதன், நிகிலா ஆகியோரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். ஜெய் கிரண் தயாரித்துள்ளார். விவேக் மெர்வின் இசை ஒவ்வொரு காட்சியையும் தூக்கி நிறுத்துகிறது. பாலாஜி கே ராஜாவின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. குறைந்த அளவிலான நட்சத்திரங்களை வைத்துக்கொண்டு குடும்பத்தையே கவரும் வகையில் படத்தை இயக்கிய ஷெரிப், முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கிறார். மொத்தத்தில் காந்தி கண்ணாடி மக்களின் முகமாக பிரதீபலிக்கிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்