Paristamil Navigation Paristamil advert login

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை..

'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை..

8 புரட்டாசி 2025 திங்கள் 10:56 | பார்வைகள் : 197


'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் இளையராஜாவின் இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக் குருவி ஆகிய பாடல்கள் இடம்பெற்றிருந்தன. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல்கள் படத்திற்கு நல்ல வலுசேர்த்தன.

இந்நிலையில், தனது பாடல்களை அனுமதியில்லாமல் பயன்படுத்தியுள்ளதாகக் கூறி இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் உயர்நீதிமன்றத்தில் அவர் அளித்திருந்த மனுவில், அனுமதியில்லாமல் பயன்படுத்திய பாடல்களை படத்தில் இருந்து நீக்கவும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், சட்டப்பூர்வ உரிமையாளரிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றதாகக் கூறியதாகவும், ஆனால் அந்த உரிமையாளர் யார் என்பதை தெரிவிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் தனது அனுமதியில்லாமல் பாடல்களை பயன்படுத்தியது பதிப்புரிமைச் சட்டத்துக்கு விரோதமானது என்பதால், படத்தில் பாடல்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கை நீதிபதி என்.செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குட் பேட் அக்லி படத்தில், மூன்று பாடல்களையும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனு குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி வழக்கை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்