Paristamil Navigation Paristamil advert login

30 ஆண்டுகளில் இருமடங்கு வளர்ந்த நகர் பகுதிகள்: சென்னை 467 சதுர கி.மீ., வளர்ச்சி

30 ஆண்டுகளில் இருமடங்கு வளர்ந்த நகர் பகுதிகள்: சென்னை 467 சதுர கி.மீ., வளர்ச்சி

11 புரட்டாசி 2025 வியாழன் 04:46 | பார்வைகள் : 215


நம் நாட்டில் அதிவிரைவான நகரமயமாக்கல் காரணமாக, கடந்த 30 ஆண்டுகளில் 4,308 சதுர கி.மீ., பரப்பளவுக்கு எட்டு முக்கிய நகரங்கள் விரிவடைந்திருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 30 ஆண்டுகளாக நிகழ்ந்த நகரமயமாக்கல் என்ற பெயரில் ரியல் எஸ்டேட் ஆலோசக நிறுவனமான, 'ஸ்கொயர் யார்ட்ஸ்' ஆய்வு நடத்தியது. ஆமதாபாத், பெங்களூரு, சென்னை, டில்லி, கொல்கட்டா, ஹைதராபாத், மும்பை மற்றும் புனே என எட்டு முக்கிய நகரங்கள், கடந்த 1995 முதல் 2025 வரை எந்த அளவுக்கு விரிவடைந்திருக்கின்றன என, ஆய்வு மேற்கொண்டது.

அதில், '1995 முதல் மொத்தம் 2,136 சதுர கி.மீ., அளவுக்கு நகர்ப்புற பரப்பளவு சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில், நாட்டின் முக்கிய எட்டு நகரங்களின், பரப்பளவு 4,308 சதுர கி.மீ., ஆக விரிவடைந்துள்ளது' என, 'ஸ்கொயர் யார்ட்ஸ்' தெரிவித்துள்ளது.

கட்டடங்கள் உள்ளிட்ட கட்டுமானங்கள் நகரங்களுக்குள் எந்த எல்லை வரை எழும்பி இருக்கின்றன என்ற கணக்கை வைத்து, நகரமயமாக்கலின் மொத்த சதுர கி.மீ., பரப்பளவு கணக்கிடப்பட்டுள்ளது.

ஸ்கொயர் யார்ட்ஸ் ஆய்வறிக்கையின்படி, மஹாராஷ்டிரா தலைநகர் மும்பை அருகே இருக்கும் புனேவில் தான் மிக வேகமான நகரமயமாக்கல் நடந்திருக்கிறது. 1995ல் 86 சதுர கி.மீ, பரப்பளவாக இருந்த புனே நகரம், 2025ல் 373 சதுர கி.மீ., பரப்பளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது.

இதே காலக்கட்டத்தில் டில்லி, 567 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்து 967 சதுர கி.மீ, பரப்பளவுக்கு வளர்ந்துள்ளது. சென்னையின் மொத்த நகரமயமாக்கல் பகுதி 197 சதுர கி.மீ., பரப்பளவில் இருந்து 467 சதுர கி.மீ., பரப்பளவாக விரிவிடைந்துள்ளது.

ஹைதராபாதின் நகரமயமாக்கல் 267 சதுர கி.மீ., இருந்து, 519 சதுர கி.மீ., ஆக அதிகரித்துள்ளது. கொல்கட்டாவின் நகரப் பகுதி, 328 சதுர கி.மீ., பரப்பில் இருந்து 611 சதுர கி.மீ., பரப்பளவாக விரிவடைந்துள்ளது.

1995ல் 412 சதுர கி.மீ., பரப்பளவாக இருந்த மும்பையின் நகரப் பகுதி, தற்போது 588 சதுர கி.மீ., பரப்பளவுக்கு நீண்டிருக்கிறது. பெங்களூரு நகரத்தின் பரப்பளவு 489 சதுர கி.மீ., ஆகவும், ஆமதாபாத் நகரத்தின் பரப்பளவு 285 சதுர கி.மீ., ஆகவும் விரிவடைந்துள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்