Paristamil Navigation Paristamil advert login

துணை ஜனாதிபதி தேர்தலால் இண்டி கூட்டணிக்குள்... குழப்பம்!

துணை ஜனாதிபதி தேர்தலால் இண்டி கூட்டணிக்குள்... குழப்பம்!

11 புரட்டாசி 2025 வியாழன் 13:46 | பார்வைகள் : 147


டில்லியில் நேற்று முன்தினம் நடந்த துணை ஜனாதிபதி தேர்தலின்போது, காங்., தலைமையிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய 'இண்டி' கூட்டணியை சேர்ந்த 14 எம்.பி.,க்கள் மாற்றி ஓட்டளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 'இண்டி' கூட்டணிக்குள் குழப்பம் உருவாகி உள்ளது. பார்லி., மழைக்கால கூட்டத் தொடர் துவங்கிய முதல் நாளான கடந்த ஜூலை 21ம் தேதி இரவு, துணை ஜனாதிபதி பதவியை ஜக்தீப் தன்கர் திடீரென ராஜினாமா செய்தார். உடல்நல காரணத்திற்காகவே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இதையடுத்து, துணை ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, நேற்று முன்தினம் நடந்தது. இந்தத் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி வேட்பாளராக தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன் களமிறக்கப்பட்டார்.

வெற்றி அதேபோல், காங்., தலைமையிலான, 'இண்டி' கூட்டணி சார்பில் தெலுங்கானாவை சேர்ந்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், ஓட்டுகள் எண்ணப்பட்டதில், 14 ஓட்டுகள் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக கிடைத்தது தெரியவந்தது. அதாவது எதிர்க்கட்சியை சேர்ந்த 14 எம்.பி.,க்கள் சுதர்ஷன ரெட்டிக்கு ஓட்டு போடுவதற்கு பதிலாக, சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மாற்றி ஓட்டு போட்டது தெரிய வந்துள்ளது.

தேர்தலில் மொத்தம் 767 எம்.பி.,க்கள் ஓட்டளித்தனர். இதில், 15 ஓட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டது.

பார்லி.,யில் லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு 427 எம்.பி.,க்கள் உள்ளனர். தவிர, பா.ஜ., வேட்பாளருக்கு ஒய்.எஸ்.ஆர். - காங்., வெளியே இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தது.

எனவே, அக்கட்சியின் எம்.பி.,க்கள் 11 பேரை சேர்த்தால், தே.ஜ., கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 438 ஓட்டுகள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், 14 ஓட்டுகள் கூடுதலாக, 452 ஓட்டுகள் கிடைத் திருக்கிறது.

காங்., தலைமையிலான 'இண்டி' கூட்டணி வேட்பாளரான ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டிக்கு 300 ஓட்டு களே கிடைத்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும்போது, எதிர்க்கட்சியை சேர்ந்த 14 எம்.பி.,க்கள், ஆளும் கூட்டணி கட்சி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரித்து ஓட்டளித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சி இதனால், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

எம்.பி.,க்கள் மாற்றி ஓட்டளித்திருந்தால், உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விஷயம். இது பற்றி இண்டி கூட்டணி விரிவாக விசாரணை நடத்த வேண்டும்,'' என காங்., மூத்த தலைவர் மணிஷ் திவாரி வலியுறுத்தியுள்ளார்.

அதே நேரம் தங்களுக்கு ஆதரவாக ஓட்டளித்த எதிர்க்கட்சி எம்.பி.,க்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பார்லி., விவகாரத் துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

துணை ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை, கட்சியின் கொறடா உத்தரவு செல்லுபடியாகாது. ஏனெனில் ரகசிய ஓட்டெடுப்பு மூலமாகவே துணை ஜனாதிபதி தேர்தல் நடக்கும். ஆனால், பெரும்பாலான எம்.பி.,க்கள் கட்சியின் அறிவுரைப்படியே நடந்து கொள்வர்.

அப்படி இருந்தும், 14 எம்.பி.,க்கள் மாற்றி ஓட்டளித்திருப்பது 'இண்டி' கூட்டணி கட்சித் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அதுவும், பீஹார், தமிழகம் என அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நெருங்கும் சமயத்தில், இப்படி நடந்திருப்பது 'இண்டி' கூட்டணி கட்சி தலைவர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது.

இது குறித்து பேசிய தேசியவாத காங்., மூத்த தலைவரான சுப்ரியா சுலே, ''ரகசிய ஓட்டெடுப்பு எனும்போது, அணி மாறி ஓட்டளித்திருப்பதை பா.ஜ.,வினர் எப்படி உறுதி செய்தனர்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

திரிணமுல் காங்கிரசின் அபிஷேக் பானர்ஜியோ, ''இது வெறும் அனுமானமாக மட்டுமே இருக்க முடியும்.

எதிர்க்கட்சியினரின் 15 ஓட்டுகள் செல்லாததாக நிராகரிக்கப்பட்டிருந்தால், மாற்றி ஓட்டளித்திருப்பது நிகழ்ந்திருக்காது. அப்படி நடந்திருந்தால், இரு தரப்பிலும் ஓட்டுகள் மாற்றி போடப்பட்டிருக்கலாம்,'' என கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்