Paristamil Navigation Paristamil advert login

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.30,000 கோடியாக அதிகரிப்பு; அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத இந்தியா

ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி ரூ.30,000 கோடியாக அதிகரிப்பு; அமெரிக்க மிரட்டலுக்கு பணியாத இந்தியா

13 புரட்டாசி 2025 சனி 11:49 | பார்வைகள் : 140


இந்தியாவின், ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது.


ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதன் வாயிலாக, உக்ரைனுக்கு எதிரான அந்நாட்டின் போருக்கு நிதியுதவி வழங்குவதாக, இந்தியா மீது அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு அமெரிக்காவின் 25 சதவீத வரி மீது, கூடுதலாக 25 சதவீதம் அபராத வரி விதிக்கப்பட்டது.

இது நியாயமற்றது என தெரிவித்துள்ள இந்தியா, சீனா, ஐரோப்பிய யூனியன் நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டியுள்ளது. அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பயந்து, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவது நிறுத்தப்படாது என்றும், நாட்டு நலனை கருத்தில் கொண்டு தொடர்ந்து வாங்கப்படும் என்றும் மத்திய அமைச்சர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த மாதத்துக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தரவுகள், இதையே உறுதிப்படுத்துகின்றன. ரஷ்ய கச்சா எண்ணெயின் முன்னணி இறக்குமதியாளரான சீனாவுக்கும், இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் குறைந்துள்ளது. ரஷ்யாவுடனான இந்தியா மற்றும் சீனாவின் எண்ணெய் வர்த்தகத்தை நிறுத்த, இந்நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஐரோப்பிய யூனியன் 100 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க வேண்டும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.ஆனால், ஐரோப்பிய யூனியனும் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கி வருகிறது.

இந்தியா கச்சா எண்ணெய் மட்டுமின்றி, நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ரகங்களை இறக்குமதி செய்துள்ளது. மற்ற நாடுகள், இயற்கை எரிவாயு, குழாய் எரிவாயு உள்ளிட்ட பிற புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்