Paristamil Navigation Paristamil advert login

அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்!

அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்!

14 புரட்டாசி 2025 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 139


வடகிழக்கு மாநிலமான மணிப்பூருக்கு, வன்முறை பாதிப்புகளுக்கு பின், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்றார். அங்கு, 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய அவர், ''அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்,'' என உறுதி அளித்தார்.

மணிப்பூரில் 2023, மே மாதத்தில் கூகி மற்றும் மெய்டி பழங்குடியின சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது; இது, இம்பால் துவங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறையாக மாறியது.வீடுகள், அரசு அலுவலகங்கள், முக்கிய கட்டடங்கள் எரிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகினர்.

சந்திப்பு

ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்த கலவரத்தில், 280க்கும் மேற்பட்டோர் பலியாகினர்; ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். தொடர் வன்முறையால், மணிப்பூரில் இருந்த பலர், இடம்பெயர்ந்தனர்.

மத்திய -- மாநில அரசுகளின் தீவிர முயற்சியால் படிப்படியாக அங்கு இயல்பு நிலை திரும்பியது. வன்முறை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று பா.ஜ.,வைச் சேர்ந்த பைரேன் சிங், கடந்த பிப்ரவரியில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. வன்முறை பாதித்த பகுதிகளுக்கு பிரதமர் மோடி செல்லாதது குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், வன்முறை பாதிப்புக்கு பின், முதன்முறையாக பிரதமர் மோடி நேற்று மணிப்பூர் சென்றார். அவரை, மாநில கவர்னர் அஜய்குமார் பல்லா, தலைமை செயலர் புனித்குமார் கோயல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.பின், இம்பால் மற்றும் சுராசந்த்பூரில் நடந்த பொதுக் கூட்டங்களில் மோடி பங்கேற்றார்.

நிகழ்ச்சியில், 7,300 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். பணிகள் முடிந்த 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார்.

வன்முறையால் பாதிக்கப்பட்டு அரசு முகாம்களில் வசித்து வரும் மக்களை அவர் சந்தித்து பேசினார். அங்குள்ள குழந்தைகளுடனும் பிரதமர் உரையாடினார்.

சுராசந்த்பூரில் ஒரு குழந்தை கொடுத்த பாரம்பரிய சிறகுகள் உடைய தொப்பியை பிரதமர் அணிந்து கொண்டார். இதையடுத்து நடந்த பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசியதாவது:

மணிப்பூர் என்ற பெயரிலேயே ரத்தினம் உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இங்கு வன்முறையின் நிழல் பதிந்துவிட்டது.துவக்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் மணிப்பூரின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் வாழ்வை மேம்படுத்தும்; இது, வரும் காலங்களில் வட கிழக்கு மாநிலங்களில் மலர்ச்சியை ஏற்படுத்தும்.

நம்பிக்கை

மணிப்பூரை அமைதி மற்றும் செழிப்பின் அடையாளமாக மாற்ற விரும்புகிறோம். இங்குள்ள மக்களுக்கு எப்போதும் ஆதரவாக இருப்பேன்.வன்முறையால் ஏற்பட்ட காயங்களை குணப்படுத்துதல், நம்பிக்கையை மீட்டெடுத்தல் மற்றும் எந்த குடும்பமும் பின்தங்கி இருக்காமல் பார்த்துக் கொள்வது ஆகியவற்றில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது.

பேச்சு மற்றும் ஒற்றுமை வாயிலாக மட்டுமே இங்கு அமைதியை ஏற்படுத்த முடியும். அமைதியின் பாதையில் மக்கள் முன்னேறி சென்று ஒவ்வொருவரின் கனவுகளையும் நிறைவேற்ற, இங்குள்ள குழந்தைகளின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்ற, அனைத்து அமைப்பு களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இடம்பெயர்ந்த மக்களுடன் சந்திப்பு

மணிப்பூரில் கூகி - மெய்டி சமூகங்களைச் சேர்ந்த 60,000க்கும் மேற்பட்டோர், சொந்த இடத்தை விட்டு வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த கூகி - மெய்டி சமூக மக்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். சுராசந்த்பூரில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களை சந்தித்த மோடி, அனைத்து உதவி களையும் செய்வதாக உறுதி அளித்தார்.

மிசோரமின் முதல் ரயில் பாதை திறந்து வைத்த பிரதமர் மோடி

வடகிழக்கு மாநிலமான மிசோரமை, நம் நாட்டின் ரயில்வே அமைப்புடன் இணைக்கும் பைராபி - சாய்ராங் புதிய ரயில் பாதையை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். தலைநகர் ஐஸ்வாலில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “மொத்தம் 8,070 கோடி ரூபாய் மதிப்பில் 51.38 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதை, மாநில மக்களின் வளர்ச்சியில் புரட்சியை ஏற்படுத்துவதுடன், போக்குவரத்தின் உயிர் நாடியாகவும் மாறும்,” என்றார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்