Paristamil Navigation Paristamil advert login

நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாக புத்துயிர் நிதி!; சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாக புத்துயிர் நிதி!; சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்

14 புரட்டாசி 2025 ஞாயிறு 12:59 | பார்வைகள் : 133


நடுத்தர வர்க்க மக்களின் சொந்த வீடு கனவு நனவாகும் வகையில், நின்று போன கட்டுமான திட்டங்களை நிறைவேற்றும் வகையில், புத்துயிர் நிதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்பது தான், வரி செலுத்தும் நடுத்தர வர்க்க மக்களின் மிகப் பெரிய கனவு. இந்த கனவை நனவாக்க, அவர்கள் வாழ்நாள் முழுதும் சேமிக்க வேண்டி இருக்கிறது.

அப்படி அவர்கள் சிறுக சிறுக பாடுபட்டு சே ர்த்த பணத்தை பெற்று, வீட்டை கட்டித் தராமல் சில 'பில்டர்'கள் ஏமாற்றி வருவதும் நாடு முழுதும் நடந்து வருகிறது.

கட்டுமான பணி இந்நிலையில், நடுத்தர வர்க்க மக்கள் இப்படி ஏமாற்றப்படுவதை தடுக்கவும், பணம் இல்லாமல் நின்று போகும் கட்டுமான திட்டங்களுக்கு மீண்டும் உயிர் கொடுக்கவும், புத்துயிர் நிதி என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பர்த்திவாலா மற்றும் ஆர்.மஹாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மத்திய அரசு வெறும் பார்வையாளராக இருக்கக் கூடாது. சொந்த வீடு வாங்குவோரின் நலனை பாதுகாக்கவும் வேண்டும். தேசிய சொத்து மறுகட்டமைப்பு கம்பெனி வரிசையில், ஒரு கார்ப்பரேட் அமைப்பை உருவாக்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

அல்லது ரியல் எஸ்டேட், தனியார் பொதுத்துறை நிறுவனங்கள் உதவியுடன் ஏதேனும் ஒரு அமைப்பை நிறுவி, நிறுத்தப்பட்ட கட்டுமான பணிகளை அடையாளம் கண்டு, கட்டி முடிக்க வேண்டும். இந்த திட்டத்தின் மூலம் விற்கப்படாத வீடுகளை வாங்கி, பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயன்பாட்டுக்கு கொண்டு வரலாம்.

மறுவாழ்வு அல்லது அந்த வீடுகளை அரசு ஊழியர்கள் தங்கும் 'குவார்ட்டர்ஸ்' எனப்படும் குடியிருப்பாக மாற்றலாம். இதன் மூலம் வீடு பற்றாக்குறை நீங்குவதுடன், நின்று போன திட்டங்களுக்கும் மறுவாழ்வு கிடைக்கும்.

வீடு கட்டும் திட்டத்துக்காக நடுத்தர வர்க்க மக்கள், தங்கள் ஒட்டு மொத்த வாழ்நாள் சேமிப்பையும் முதலீடு செய்கின்றனர்.

இப்படி சொந்த வீடு கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்குவோர், வீட்டிற்கான மாதத் தவணையை ஒரு பக்கமும், குடியிருக்கும் வாடகை வீட்டிற்கான மாத வாடகையை மறுபக்கமும் செலுத்துவதால், அவர்களுக்கான நிதி சுமை அதிகரிக்கிறது.

இப்படி பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி இருக்கும் சூழலில், திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்கப்படாத வீடுகளால், அவர்களது சொந்த வீடு கனவு பலிக்காமல் போகும் நிலை ஏற்படுகிறது.

எனவே , நிதி பற்றாக்குறையால் நின்று போன கட்டு மான திட்டங்கள், விற்கப்படாத வீடுகள் ஆகியவற்றுக்கு உயிர் கொடுக்க, தேசிய சொத்து மறுகட்டமைப்பு க ம்பெனியின் கீழ் புத்துயிர் நிதியை உருவாக்க வேண்டும்.

அல்லது 'சுவாமி' எனப்படும் விலையில்லா மற்றும் நடுத்தர வருமான வீட்டு திட்டங்களுக்கான சிறப்பு சாளர நிதியை நீட்டிக்க வேண்டும்.

மேலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகள் நாடு முழுதும் ஒரே மாதிரி இருக்கும் வகையில் அமல்படுத்த வேண்டும். இது தொடர்பாக மத்திய அரசு மூன்று மாதங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்