செங்கோட்டையன் கோரிக்கை குறித்து நாளை அமித்ஷாஅ.தி.மு.க., பழனிசாமி சந்திப்பு!

15 புரட்டாசி 2025 திங்கள் 10:25 | பார்வைகள் : 132
பா.ஜ., மேலிடத்தின் அழைப்பை ஏற்று, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நாளை டில்லி செல்கிறார். அங்கு, 'அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் விடுத்துள்ள கோரிக்கை குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்தும் இறுதிக்கட்ட பேச்சில் பங்கேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகள் அப்படியே தொடர்கின்றன. ஆனால், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணியில், கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பிளவு ஏற்பட்டது.
தோல்வி
தே.மு.தி.க., - எஸ்.டி.பி.ஐ., புதிய தமிழகம் கட்சிகள் மட்டுமே இக்கூட்டணியில் இடம் பெற்றன.
அதே நேரத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்த மற்றொரு கூட்டணியில், பா.ம.க., - அ.ம.மு.க., - த.மா.கா., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணி மற்றும் பல சிறிய கட்சிகள் இடம் பெற்றன. தேர்தலில் இரு கூட்டணியும் தோல்வியையே தழுவின.
அதனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை சந்திக்க, பா.ஜ., - அ.தி.மு.க., இடையே மீண்டும் கூட்டணி அமைந்துள்ளது. மேலும், சில கட்சிகள் இணைய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பழனி சாமியின் பேச்சை கேட்டு, பா.ஜ., தங்களை புறக்கணிப்பதாக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகினார். அவரை தொடர்ந்து அ.ம.மு.க.,வும் கூட்டணியில் இருந்து விலகியது.
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த தே.மு.தி.க., - புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் தற்போது கூட்டணியில் இல்லை. பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க.,வும் தற்போது அக்கூட்டணியில் இல்லை.
இப்படி, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பலவீனமாகி வரும் சூழலில், 'அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் கொடுத்தார்.
அதை ஏற்க மறுத்த பழனிசாமி, அவரது கட்சி பதவிகளை பறித்தார். இதையடுத்து, டில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார்.
இருவரும் தன்னை டில்லிக்கு அழைத்து, அ.தி.மு.க.,வை ஒருங்கிணைப்பது குறித்து பேசியதாகவும் கூறினார். இது, பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அ.தி. மு.க.,விலும் சலசலப்பை ஏற்படுத்தியது.
நிபந்தனைகள்
இந்நிலையில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, பா.ஜ., மேலிட அழைப்பில் நாளை மாலை டில்லி செல்கிறார்; அங்கு, அமித் ஷாவை சந்தித்து பேசுகிறார்.
அ.தி.மு.க., ஒருங்கிணைப்பு குறித்து ஏற்கனவே பழனிசாமிக்கு அமித் ஷா பல யோசனைகளை தெரிவித்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட ஆலோசனை என்ற பெயரில் நடத்தும் 'பஞ்சாயத்து'க்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அழைக்கப்பட்டிருப்பதாகவே அவரது கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அ.தி.மு.க., ஒருங்கிணைய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பழனிசாமிக்கு, அமித் ஷா நிபந்தனைகள் விதிக்கலாம் என தெரிகிறது.
இந்த பேச்சின் போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை பலப்படுத்த, மேலும் பல கட்சிகளை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியத்தையும், அதற்கான நடவடிக்கைகள் குறித்து பழனிசாமியிடம் அமித் ஷா பேசுவார் என்றும் கூறப்படுகிறது.
அத்துடன், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனையும் நேரில் சந்தித்து பழனிசாமி வாழ்த்து தெரிவிக்கிறார்.
பிரசார தேதி மாற்றம்
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நாளை டில்லி செல்வதால், 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' பிரசார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 7ம் தேதி முதல் சட்டசபை தொகுதி வாரியாக பயணம் மேற்கொண்டுள்ள பழனிசாமி, இதுவரை நான்கு கட்ட பிரசாரத்தை நிறைவு செய்துள்ளார். அவர், தன் ஐந்தாம் கட்ட பிரசார பயணத்தை வரும் 17ம் தேதி, தர்மபுரி மாவட்டம் தர்மபுரி தொகுதியில் துவக்கி, 26ம் தேதி, கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் நிறைவு செய்வார் என்று அ.தி.மு.க., தலைமை அறிவித்திருந்தது. தற்போது அவர் நாளை டில்லி செல்வதால், 17, 18ம் தேதிகளில் தர்மபுரி மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில், வரும் 28, 29ம் தேதிகளில் பழனிசாமி பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025