Paristamil Navigation Paristamil advert login

பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு சிந்து நதிநீரை திருப்பிவிட மத்திய அரசு முடிவு

பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு சிந்து நதிநீரை திருப்பிவிட மத்திய அரசு முடிவு

16 புரட்டாசி 2025 செவ்வாய் 09:49 | பார்வைகள் : 133


சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நீரை, நம் நாட்டில் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு திருப்பி விட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என, மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் அரங்கேற்றிய தாக்குதலைத் தொடர்ந்து, அந்நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால், பாகிஸ்தானில் உள்ள நீர் நிலைகளுக்கு செல்லும் நீர் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் பேசியதாவது:

சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்ட விவகாரம் சர்வதேச தலையீடுகள் நிறைந்தது. இது தொடர்பாக நம் நாட்டிற்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்கள் இணைந்து செயலாற்றி வருகின்றன.

பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நீரை, நம் நாட்டில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலங்களுக்கு திருப்பி விட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது, நம் நாட்டிற்கு பெரும் சாதகமாக அமையும். இதன் வாயிலாக விவசாயிகள், பொதுமக்களின் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும்.

இதேபோல் தண்ணீர் பற்றாக்குறையை போக்க, நாடு முழுதும் கூடுதல் நீர்த்தேக்கங்களை கட்டமைக்கும் பணிகள் பொது மக்களின் பங்களிப்பில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த எட்டு மாதங்களில் மட்டும் 32 லட்சம் நீர்த்தேக்கங்கள் கட்டப்பட்டுள்ளன. ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வாயிலாக, நதி நீரை துாய்மைப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்