தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம்

16 புரட்டாசி 2025 செவ்வாய் 12:49 | பார்வைகள் : 140
தமிழகத்தில் பா.ஜ.,வை ஓட்டுச்சாவடி அளவில் பலப்படுத்த, மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் சென்று, கட்சியினரை சந்திக்க உள்ளார். இது குறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:
தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில், 30 - 35 தொகுதிகளிலும், 2029 லோக்சபா தேர்தலில் 10 - 15 தொகுதிகளிலும் பா.ஜ., போட்டியிட முடிவு செய்துள்ளது; அனைத்திலும் வெற்றி பெற வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. அதற்கு கட்சியை பலப்படுத்த வேண்டும். எனவே, பூத் அளவில் இருந்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையில் மாநிலத் தலைமை ஈடுபட்டுள்ளது.
முதல் கட்டமாக, தமிழகம் முழுதும் எட்டு இடங்களில், மண்டல அளவில் 'பூத் கமிட்டி' மாநாடுகள் நடத்தப்பட உள்ளன.
கடந்த மாதம் திருநெல்வேலியில் நடந்த முதல் மாநாட்டில், தென் மாவட்டங்களில் உள்ள ஐந்து லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, 'பூத் கமிட்டி' நிர்வாகிகள் பங்கேற்றனர். வரும் 21ம் தேதி திண்டுக்கலில் 'பூத் கமிட்டி' மாநாடு நடக்க உள்ளது.
இதில், மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். சில நாட்கள் இடைவெளி விட்டு, கோவை, சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட உள்ளது. அதன்பின், நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் செல்ல உள்ளார்.
அவர், கட்சி நிர்வாகிகள், அணி, பிரிவுகளின் நிர்வாகிகள், தொண்டர்களை சந்திப்பதுடன், பொதுக் கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார்.
இந்நிகழ்ச்சிகளில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பதுடன், மத்திய அரசு திட்டங்கள் வாயிலாக, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன. அதன் பின், கட்சிக்கு மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் எழுச்சி ஏற்படும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.