அம்பானி மகனின் விலங்குகள் நல மையத்தில் முறைகேடு இல்லை

16 புரட்டாசி 2025 செவ்வாய் 13:49 | பார்வைகள் : 140
குஜராத்தின் ஜாம்நகரில், தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானி, 'வன்தாரா' என்ற பெயரில் விலங்குகள் நல மையத்தை நடத்தி வருகிறார். இங்கு, சட்டவிரோத செயல்பாடுகள் நடப்பதாகவும், பல அரிய வகை விலங்குகள் கடத்தப்பட்டு இங்கு கொண்டுவரப் படுவதால் இந்த மையத்தை சட்டவிரோதமாக அறிவிக்கும்படி வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக விசாரிக்க எஸ்.ஐ.டி., எனப்படும், சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இதற்கிடையே இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அம்பானி மகன் அனந்த் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, “உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவிற்கு, 'வன்தாரா' ஊழியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி உள்ளனர். அந்தக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் சில முக்கியமான தகவல்கள் இருப்பதால், அவற்றை பொதுவெளியில் வெளியிடக் கூடாது,” என, வாதிட்டார்.
அப்போது பேசிய நீதிபதிகள், 'நாங்கள் அந்த அறிக்கையை படித்து பார்த்தோம். தனியார் வனம் செயல்படும் விதம் குறித்து விசாரணை குழு திருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறது. அனைத்து விதிமுறைகளும் முழுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்' என்றனர்.
அப்போது மனுதாரரான வழக்கறிஞர் ஜெய் சுகின், “சில கோவிலுக்கு சொந்தமான யானைகளை கூட கோவில் நிர்வாகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த தனியார் வனப் பகுதிக்கு அழைத்துச் செல்கின்றனர்,” என்றார்.
அதற்கு பதில் அளித்த நீதிபதிகள், 'கோவில் யானைகளை இவ்வாறு தனியார் வனப்பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதில் எந்த தவறும் இல்லை' என, தெரிவித்தனர். மேலும், 'சிறப்பு விசாரணை குழு சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக, இனி யாரும் வழக்குகள் தாக்கல் செய்யக் கூடாது. இந்த தனியார் வனப்பகுதி சம்பந்தமான அவதுாறு செய்திகளையும் பரப்பக்கூடாது' என, திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.