டில்லியில் அமித்ஷா உடன் இபிஎஸ் ஆலோசனை

17 புரட்டாசி 2025 புதன் 11:18 | பார்வைகள் : 129
டில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் குரல் கொடுத்தார். அதை ஏற்க மறுத்த இபிஎஸ் அவரது கட்சி பதவிகளை பறித்தார். இதையடுத்து, டில்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து பேசினார். இருவரும் தன்னை டில்லிக்கு அழைத்து, அதிமுகவை ஒருங்கிணைப்பது குறித்து பேசியதாகவும் கூறினார். இது, பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், அதிமுகவிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. தேஜ கூட்டணியில் இருந்து தினகரன், ஓபிஎஸ், உள்ளிட்டோரும் வெளியேறினர்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இபிஎஸ் இன்று விமானம் மூலம் டில்லி சென்றார்.அவருடன் கே.பி. முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும் உடன் சென்றனர். விமான நிலையத்தில் தம்பிதுரை, இன்பதுரை, சி.வி.சண்முகம் உள்ளிட்ட எம்பிக்கள் அவரை வரவேற்றனர். காலையில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை, இபிஎஸ் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று இரவு டில்லியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இபிஎஸ் சந்தித்து பேசினார். அவருடன் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை, சி.வி.சண்முகம் ஆகியோரும் அமித்ஷாவை சந்தித்தனர். இதன் பிறகு, நிர்வாகிகள் வெளியேறிய நிலையில், அமித்ஷா உடன் இபிஎஸ் தனியாக ஆலோசனை நடத்தினார்.