குடியேறிகள் மற்றும் முஸ்லிம்கள் குறித்த வெறுப்பு பேச்சு – எரிக் செமூர் குற்றவாளி என தீர்ப்பு!!

17 புரட்டாசி 2025 புதன் 18:42 | பார்வைகள் : 1100
வலதுசாரி கட்சித் தலைவர் எரிக் செமூர், 2019 ஆம் ஆண்டு நிகழ்த்திய இனவெறி மற்றும் முஸ்லிம்கள் குறித்த அவதூறு உரைகளுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றமான "La Cour de Cassation", கடந்த பிப்ரவரி மாதம் பரிஸ் மேல் முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நேற்று உறுதிப்படுத்தியது. இதனால், செமூருக்கு விதிக்கப்பட்ட 15 ஆயிரம் யூரோ குற்றப்பணம், இனவெறி எதிர்ப்பு அமைப்பான SOS Racisme உட்பட பல்வேறு தரப்புகளுக்கு இழப்பீடும் விதிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு செப்டம்பரில் பரிஸில் நடந்த "convention de la droite" மாநாட்டில், குடியேறிகள் "ஆக்கிரமிப்பாளர்கள்" என்றும், தெருக்களில் "இஸ்லாமியப்படுத்தல்" நடக்கிறது என்றும் செமூர் உரையாற்றியிருந்தார். அத்துடன், முஸ்லீம் பெண்களின் பர்தா மற்றும் ஜெலபா உடைகளை "ஆக்கிரமிப்பு படையணி சீருடை" என சித்தரித்திருந்தார். இந்தத் தீர்ப்பு குறித்து SOS Racisme அமைப்புத் தலைவர் டொமினிக் சோப்போ, "பிரான்ஸ் வெறுப்புரையை அனுமதிக்காது; இனவெறிக்கு எதிரான போராட்டம் நாளும் தொடர வேண்டிய ஒன்று" என்று வலியுறுத்தியுள்ளார்.