அமெரிக்க வரி உயர்வால் திருப்பூரில் நிலவும் மந்த நிலை

18 புரட்டாசி 2025 வியாழன் 06:06 | பார்வைகள் : 130
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி, அமெரிக்க வரி உயர்வால், மந்தநிலை நிலவுவதாக, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த மாதம், 10,804 கோடி ரூபாய் அளவுக்கு நடந்துள்ளது.
இது, 2024 - 25ம் ஆண்டு ஆக., மாதம் நடந்த வர்த்தகத்தை காட்டிலும், ரூபாய் மதிப்பில், 8.89 சதவீதம் அதிகம். அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிடும் போது, 2.6 சதவீதம் அளவுக்கு குறைவு என்று, ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஏப்., முதல் ஆக., வரையிலான, ஐந்து மாதத்தில், 58,193 கோடி ரூபாய்க்கு ஆடை ஏற்றுமதி நடந்துள்ளது. முந்தைய நிதியாண்டின், இதே காலகட்டத்தில் நடந்த ஏற்றுமதியை காட்டிலும், 4,762 கோடி ரூபாய் அதிகம்.
நடப்பு நிதியாண்டின் துவக்கத்தில் இருந்தே, ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அபரிமிதமான வளர்ச்சியை பெற்றிருந்தது. முந்தைய ஆண்டுகளை காட்டிலும், 11 முதல், 17 சதவீதம் அதிகம் ஏற்றுமதி நடந்தது. ஆனால், அமெரிக்க வரி உயர்வு காரணமாக, ஜூலை மாதத்தில் இருந்து வர்த்தக விசாரணையில் சிறிய சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக, கடந்த மாதத்தில் இருந்து ஏற்றுமதி மதிப்பு குறைய துவங்கியுள்ளது. வரி சீரமைப்பு தொடர்பாக, விரைவில் பேச்சு துவங்கி, சுமூக தீர்வு கிடைக்குமென, ஜவுளித்துறையினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) துணை தலைவர் சக்திவேல் கூறுகையில், ''இந்திய ஆடை ஏற்றுமதித்துறை, புதிய சவால்களை சந்தித்த பின்னரும், தனது வலிமையை நிலை நிறுத்தியுள்ளது. உலகளாவிய தேவை அதிகரித்துள்ளதால், ஆடைத்துறையின் நிலைத்தன்மை மற்றும் புதுமையில் கவனம் செலுத்தி வருகிறோம். வரும் மாதங்களிலும், ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும்,'' என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் கூறுகையில், ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்க வரி விதிப்பால், சிறிய சுணக்கம் ஏற்பட்டிருக்கிறது.
பரஸ்பரம் பேச்சுவார்த்தை துவங்க இருப்பதால், விரைவில் சுமுக தீர்வு கிடைக்கும். இருப்பினும், வழக்கமான ஆடை ஏற்றுமதியில் பாதிப்பு இருக்காது; கூடுதல் வர்த்தக வளர்ச்சியில் உருவான மந்தநிலையும் விரைவில் மாறும்,'' என்றார்.