Paristamil Navigation Paristamil advert login

வடக்கில் ஹர்த்தால் - பல இடங்களில் இயல்பு நிலை

வடக்கில் ஹர்த்தால்  - பல இடங்களில் இயல்பு நிலை

18 ஆவணி 2025 திங்கள் 10:23 | பார்வைகள் : 174


வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை வெளியேற்றக் கோரி தமிழரசு கட்சியினால், பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், வடக்கின் சில இடங்களில் கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கப்பட்ட போதிலும், பெருமளவான இடங்களில் இயல்பு நிலை சுமுகமாக காணப்பட்டது.

முத்தையன்கட்டு குளத்தில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ பிரசன்னத்தாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், அதனால் இராணுவத்தினரை வெளியற்றுமாறு கோரி தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம். ஏ சுமந்திரன் வடக்கு கிழக்கில் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக 15ஆம் திகதி கதவடைப்பு போராட்டம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் மன்னார் மடு தேவாலய பெருநாள் என்பதால், 18ஆம் திகதியான இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டது.

கதவடைப்பு போராட்டத்திற்கு தம்முடன் கலந்து ஆலோசிக்கவில்லை என வர்த்தக சங்கங்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பொது அமைப்புகள் குற்றம் சாட்டி, போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்திருந்தன.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை சில இடங்களில் கடைகள் பூட்டப்பட்டு இருந்தாலும், பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு இருந்தமையும் அவதானிக்க முடிந்தது.

அதேவேளை போக்குவரத்து சேவைகள் வழமை போன்று இயங்கி வருவதுடன், அரச திணைக்களங்கள், பாடசாலைகள் என்பனவும் வழமை போன்று இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்