வருடாந்திர பாஸ்டேக் பாஸ்க்கு கூடியது மவுசு; 4 நாட்களில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவை விற்பனை!

19 ஆவணி 2025 செவ்வாய் 06:49 | பார்வைகள் : 100
ஆகஸ்ட் 15ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வருடாந்திர பாஸ்டேக் பாஸ், பயனர்களிடமிருந்து, குறிப்பாக இரண்டு தென் மாநிலங்களிலிருந்து, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ரூ. 3 ஆயிரம் ரூபாய் செலுத்தி, வருடாந்திர 'பாஸ்டேக் ' வாங்கி கொண்டால், 200 தடவை டோல்கேட்டை கடந்து சென்று வரலாம் என்று அரசு அறிவித்துள்ளது, அனைவரும் அறிந்ததே. இதை பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். கடந்த ஆக., 15ம் தேதி முதல் வருடாந்திர பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பாஸ் வாங்கிய நாளிலிருந்து ஓராண்டுக்கு செல்லுபடியாகும். அல்லது, 200 முறை டோல்கேட்டுகளை கடந்து செல்லலாம். இதில், எது அதிகமோ அதுவரை பாஸ் செல்லுபடியாகும்.
வணிக நோக்கமில்லாத தனியார் வாகனங்களுக்காக, இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கார், ஜீப், வேன்களுக்கு இது பயன் அளிக்கும். இந்த பாஸ், நாடு முழுதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய எக்ஸ்பிரஸ் டோல் பிளாசாக்களில், இலவசமாக பயணிக்க அனுமதிக்கிறது. ஆனால் மாநில அரசுகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகள் நிர்வகிக்கும் சாலைகளில் உள்ள, சுங்க சாவடிகளில் இதை பயன்படுத்த முடியாது. அத்தகைய சுங்க சாவடிகளில் வழக்கமான பாஸ் டேக்கில் பயணிக்கலாம். வருடாந்திர பாஸ்டேக் பாஸ், பயனர்களிடமிருந்து, குறிப்பாக இரண்டு தென் மாநிலங்களிலிருந்து, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு நாட்களுக்குள், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பாஸ் ஆண்டு டிக்கெட்டுகளை விற்றுள்ளது.இதில் தமிழகத்தில் 1.5 லட்சமும் கர்நாடகாவில் ஒரு லட்சமும் அடங்கும். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பாஸ் வாங்குபவர்களுடன், ஹரியானா தற்போது, வருடாந்திர பாஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளிலேயே, 1.4 லட்சம் பயனர்கள் வருடாந்திர பாஸ்டேக் பாஸ்களை வாங்கினர். அதே நாளில் சுங்கச்சாவடிகளில் சுமார் 1.39 லட்சம் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், தமிழகம், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் வருடாந்திர பாஸ் மூலம் அதிகபட்ச பரிவர்த்தனைகள் பதிவாகி உள்ளன.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாஸ்டேக் வருடாந்திர பாஸ்க்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது. கடந்த நான்கு நாட்களில் அதிக எண்ணிக்கையிலான வருடாந்திர பாஸ்களை வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்கள் உள்ளன.
வருடாந்திர பாஸ் ஏற்பாட்டின் அறிமுகம் ராஜ்மார்க் யாத்ரா மொபைல் செயலி பயனர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளது. இந்த செயலி மூலம் ஒருவர் பாஸ் வாங்கலாம். இது கூகிளின் பிளேஸ்டோர் தரவரிசையில் ஒட்டுமொத்தமாக 23வது இடத்தையும், பயணப் பிரிவில் 15 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களுடன் 2வது இடத்தையும் எட்டியுள்ளது.
இந்த செயலிக்கு 4.5 ஸ்டார் வழங்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் வருடாந்திர பாஸ் அறிமுகப் படுத்தப்பட்ட 4 நாட்களுக்குள் இந்த செயலி சிறந்த அரசாங்க செயலியாக மாறுவதற்கான ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.