பிரதமர் மோடியுடன் ரஷ்ய அதிபர் பேச்சு: டிரம்ப்பை சந்தித்தது குறித்து விளக்கம்

19 ஆவணி 2025 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 100
பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்ட ரஷ்ய அதிபர் புடின், அலாஸ்கா நகரில் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து விளக்கமளித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புடினும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர். இதன் பிறகு, அலாஸ்காவில் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து புடின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. ஆனால் இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமானதாக இருந்தது என தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில், பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஷ்ய அதிபர் புடின், அலாஸ்கா நகரில் அதிபர் டிரம்ப் உடன் நடந்த கலந்துரையாடல் குறித்து விளக்கினார். அப்போது புடினுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, நடக்கும் மோதலுக்கு தூதரகம் மற்றும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துக்கூறினார்.
இது தொடர்பான முயற்சிகளுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிக்கும் எனவும் கூறினார். இந்தியா ரஷ்யா இடையிலான சிறப்பு பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், இரு தரப்பு ஒத்துழைப்பு குறித்தும் விவாதித்தனர். இருவரும் தொடர்பில் இருக்கவும் ஒப்புக் கொண்டனர்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: தொலைபேசியில் என்னை அழைத்து, டிரம்ப் உடன் நடந்த பேச்சு குறித்து என்னிடம் விளக்கிய எனது நண்பர் புடினுக்கு நன்றி. உக்ரைன் பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவித்தேன். வரும் நாட்களில் தொடர்ந்து தொடர்பில் இருக்கவும் முடிவு செய்தோம். இவ்வாறு அந்த அறிக்கையில் மோடி தெரிவித்துள்ளார்.