மார்பக வலியால் அவதிப்படும் பெண்கள் - காரணமும், தீர்வும்
22 சித்திரை 2021 வியாழன் 07:01 | பார்வைகள் : 8618
மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின் போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.
பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம். சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.
பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள். இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.
உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.மனஅழுத்தம் உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக் டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும். இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.
நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும். அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது போன்றவற்றையும் தவிருங்கள். சீரற்ற சாலைகளில் அதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.
மார்பக வலியில் எச்சரிக்சை அடைய வேண்டிய சில அறிகுறிகளும் இருக்கின்றன. மார்பக காம்புகள் உள் இழுத்த நிலையில் இருந்தால் ரத்தமோ அல்லது வேறுவித திரவமோ அதில் இருந்து சுரந்தால் மார்பகங்கள் சிவந்து காணப்பட்டால் உடனே டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
சிலருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.
மார்பக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். தரமான பொருத்தமான பிரா அணியுங்கள். நெஞ்சுப் பகுதிக்கான எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள்.