செம்பரம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பு; சென்னை குடிநீர் சுகாதாரம் கேள்விக்குறி

26 ஆவணி 2025 செவ்வாய் 08:00 | பார்வைகள் : 142
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள், கழிவுநீர் கால்வாயாக மாறி வருகிறது. இதில், குடியிருப்பு, மருத்துவமனை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து, மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த ஏரியின் உபரிநீர் வெளியேறும் இடத்தில் அடையாறு ஆறு உருவாகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர், அடையாற்றில் இணைந்து நந்தம்பாக்கம், சைதாப்பேட்டை வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து, வங்கக் கடலில் கலக்கிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளிலேயே செம்பரம்பாக்கம் ஏரி மிகவும் பெரியது. ஏரியின் கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர அணைகளுக்கு இணையான கொள்ளளவு கொண்ட ஏரி. பேரம்பாக்கம் அடுத்த கேசாவரம் அணைக்கட்டில் இருந்து உருவாகும் கூவம் ஆறு, அரண்வாயல் பகுதியில் கிருஷ்ணா கால்வாயாக பிரிந்து, தண்டலம் சவீதா கல்லுாரி அருகே செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
அதேபோல், கூவம் ஆறு புதுச்சத்திரம் அணைக்கட்டு பகுதியில் பங்காரு கால்வாயாக பிரிந்து நேமம், குத்தம்பாக்கம் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது. இதில், தண்டலம் பகுதியில் உள்ள சவீதா மருத்துவ கல்லுாரி மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாய் வழியாக செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.
பங்காரு கால்வாயில் திருமழிசை, குத்தம்பாக்கம் பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கிறது.மேலும், செட்டிபேடு பகுதியில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் நீர்வரத்து கால்வாயில், லாரிகள் மூலம் கழிவுநீர் கொண்டு வந்து விடப்படுகிறது. இவ்வாறு, பல பகுதி களிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் கால்வாய்களில் கழிவுநீர் கலந்து வருவதால், சென்னை மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன், தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரி மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கிருஷ்ணா கால்வாயில் கலக்காதவாறு, நீர்வளத்துறை அதிகாரிகள் கால்வாயின் இருபுறமும் கரைகளை பலப்படுத்தினர். ஆனால், சில நாட்களாக பெய்த மழையால், கால்வாயின் இருபுறமும் கரைகள் சேதமடைந்து, கிருஷ்ணா கால்வாயில் கழிவுநீர் கலந்து வருவதால், செம்பரம்பாக்கம் ஏரி நீர், கழிவுநீராக மாறி வருகிறது.
எனவே, செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்களை ஆய்வு செய்து, கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்தி, சென்னை மக்களின் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3