முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்
4 சித்திரை 2021 ஞாயிறு 09:30 | பார்வைகள் : 9869
மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, கர்ப்பம், சூரிய ஒளியில் அதிக நேரம் செலவிடுவது, ரத்தசோகை, ஹைப்போ தைராய்டிசம், வைட்டமின் பி குறைபாடு, ரசாயனம் கலந்த பொருட்களை கூந்தலுக்கு அதிகம் பயன்படுத்துவது போன்றவை முடி உதிர்வதற்கான பொதுவான காரணங்கள். அதேநேரத்தில் முடியின் ஆரோக்கியத்தை கொண்டே அவரது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை தீர்மானித்துவிடலாம். அதனால் முடிஉதிர்வு பிரச்சினையை எதிர்கொண்டால் உடனே அதற்கு தீர்வு காண்பதற்கு முயற்சிக்க வேண்டும்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்:
உலர்ந்த அத்திப்பழம்: கூந்தல் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்துக்கள் அத்திப்பழத்தில் உள்ளன. அவை ரத்த ஓட்டத்தை தூண்டி முடி வளர்ச்சியை விரைவுபடுத்தும். அத்திப்பழத்தில் அதிக அளவு கால்சியமும் உள்ளது. இது தலை முடியை உருவாக்கும் கொலாஜன் உருவாகுவதற்கு முக்கிய பங்களிக்கிறது. இரவில் 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை ஊற வைத்துவிட்டு காலையில் தண்ணீருடன் சேர்த்து சுவைக்கலாம். இரண்டு மாதங்கள் இவ்வாறு சாப்பிட்டு வந்தால் கூந்தல் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றம் உருவாகும்.
கருப்பு உலர் திராட்சை: ஊறவைத்த கருப்பு உலர் திராட்சையில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. இது தலையில் ரத்த ஓட்டத்தை சீராக பராமரிப்பதற்கும், மயிர்கால்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. கருப்பு திராட்சை முடி உதிர்வதை தடுக்கும் சக்திகொண்டது. 7-8 கருப்பு உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு காலையில் நீரை வடிகட்டிவிட்டு உட்கொள்ளலாம்.
முடி உதிர்தலை கட்டுப்படுத்தும் உணவுகள்
கறிவேப்பிலை: இதில் ஆன்டி ஆக்சிடென்டுகள் அதிகம் உள்ளன. அவை தலையில் ஈரப்பதத்தை தக்கவைப்பதோடு இறந்த மயிர்கால்களை நீக்கவும் உதவுகின்றன. கருவேப்பிலையில் இருக்கும் பீட்டோ கரோட்டின் மற்றும் புரத சத்துக்கள் முடி உதிர்வதை தடுக்கக்கூடியவை. முடிக்கு வலிமையும் அளிக்கும். கருவேப்பிலையை சமையலில் உபயோகிப்பதோடு மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கு முன்பாக 10 கறிவேப்பிலை இலைகளை உட்கொள்வது சிறந்த பலனை தரும்.
பூசணி: பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாதுக்கள் பூசணியில் நிறைந்துள்ளன. அவை கூந்தல் ஆரோக்கியத்திற்கும், முடி வளர்ச்சிக்கும் உதவும். கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு துத்தநாகம் உதவும். மேலும் இறக்கும் மயிர்க்கால்களை அகற்றவும், மீண்டும் அதில் வலுவான முடி வளர்ச்சிக்கும் வித்திடும்.
ரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதன் மூலம் முடி வளர்ச்சியை தூண்டவும் உதவும். பூசணிக்காய் விதைகளை ஊட்டச்சத்துக் களின் புதையல் என்றே ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். முடி உதிர்வடைந்து வழுக்கை தலை பிரச் சினையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பவர்கள் பூசணி விதையை சாப்பிடலாம். குறிப்பாக அளவுக்கு அதிகமாக டெஸ்டோஸ்டிரான் ஹார்மோன் சுரந்து வழுக்கை நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சிறிதளவு பூசணி விதைகளை இரவில் ஊறவைத்து காலையில் உட்கொள்ளலாம்.
முள்ளங்கி : முடி உதிர்தல், முடி பலவீனம், முடி வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு முள்ளங்கி இலைகள் நிவாரணம் தரும். கூந்தலில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்து முடி உதிர்வதற்கான வாய்ப்பையும் குறைக்கக்கூடியது. இதிலிருக்கும் வைட்டமின் ஏ, கே மற்றும் சி ஆகியவை முடி வளர்ச்சியை தூண்டக்கூடியவை. கேரட் ஜூஸுடன் முள்ளங்கி இலைகளை சேர்த்து பருகலாம்.