தி.மு.க.,வை வெறுப்பேற்ற விஜய் வியூகம்; காங்., ராகுலை சந்தித்து பேச திட்டம்

28 ஆவணி 2025 வியாழன் 13:12 | பார்வைகள் : 181
அண்ணாதுரை பிறந்த நாளில் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்கி, தி.மு.க.,வை கடுப்பேற்ற விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
த.வெ.க., தலைவர் விஜய், தன் அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறார். சமீபத்தில் மதுரையில் இரண்டாவது மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய உற்சாகத்தில் உள்ளார். தற்போது, ஜனநாயகன் படத்தின் டப்பிங் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இப்படத்தை ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. அதற்கு முன் மக்கள் சந்திப்பை துவக்கி, முதல்வர் ஸ்டாலினுக்கு நெருக்கடி தரப்போவதாக, மாநாட்டில் விஜய் அறிவித்தார்.
அதன்படி, செப்., 15 முதல், தன் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்க உள்ளார். தி.மு.க.,வினரை கடுப்பேற்றும் வகையில், அண்ணாதுரை பிறந்த நாளில் நடைபயணத்தை துவக்க உள்ளார்.
இதனிடையே, கூட்டணி தொடர்பாகவும் சிறிய கட்சிகளுடன் விஜய் பேச்சு நடத்தி வருகிறார். காங்., கூட்டணிக்காக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலை சந்திக்க திட்டமிட்டு உள்ளார். தற்போது, பீஹாரில் ராகுல் நடைபயணத்தில் உள்ளார். இதில் பங்கேற்க, பல்வேறு சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், விஜயை பீஹார் அழைத்து சென்று, ராகுலுடன் கைகோர்க்க வைக்க, தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் முயற்சித்து வருகின்றனர். இதற்கு விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை அறிந்த தி.மு.க., தலைமை, ராகுல் - விஜய் சந்திப்பை, காங்., மூத்த தலைவர்கள் உதவியுடன் தடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.