Paristamil Navigation Paristamil advert login

வெடிக்கும் நிலையில் மவுண்ட் ஃபுஜி...! டோக்கியோ நகர மக்களுக்கு எச்சரிக்கை

வெடிக்கும் நிலையில் மவுண்ட் ஃபுஜி...! டோக்கியோ நகர மக்களுக்கு எச்சரிக்கை

28 ஆவணி 2025 வியாழன் 10:57 | பார்வைகள் : 277


மவுண்ட் ஃபுஜி எரிமலை தொடர்பில் டோக்கியோ நகரில் வசிக்கும் 20 மில்லியன் மக்களுக்கு ஜப்பான் அரசாங்கம் AI காணொளி ஒன்றை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மவுண்ட் ஃபுஜி எரிமலை வெடிக்கும் என்றால், கண்ணிமைக்கும் நேரத்தில் டோக்கியோ நகரம் மொத்தம் எரிமலை சாம்பலால் மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், ஒரு வெடிப்பு உடனடியாக நிகழும் என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை என்றாலும், ஃபுஜி செயலில் உள்ள எரிமலை என்றே தெரிவித்துள்ளனர். சுமார் 318 வருடங்களுக்கு முன்பு ஃபுஜி எரிமலை கடைசியாக வெடித்துள்ளது.

தற்போது டோக்கியோ நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள காணொளியில், எவ்வித எச்சரிக்கையும் இன்றி, அந்த நொடி நிகழலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

எரிமலை சாம்பல் இரண்டு மணி நேரத்திற்குள் டோக்கியோவை அடையக்கூடும் என்றும், இதனால் உடல்நலக் கேடுகள் ஏற்படக்கூடும் என்றும், மின்சாரம், போக்குவரத்து மற்றும் உணவு விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படும் என்றும் அந்த காணொளி மக்களை எச்சரிக்கிறது.

 

மக்கள் எப்போதும் தயார் நிலையில் இருக்கவே, அரசாங்கம் இதுபோன்ற காணொளிகளை வெளியிடுவதாகவும், அச்சுறுத்துவதற்கு அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

கடுமையான பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஜப்பானுக்கு புதிதல்ல. ஜப்பான் பசிபிக் பெருங்கடலின் இருபுறமும் தீவிர நில அதிர்வு மற்றும் எரிமலை செயல்பாடுகளைக் கொண்ட ஒரு பகுதியான நெருப்பு வளையத்தில் அமைந்துள்ளது.

 

டோக்கியோ நகர மக்களின் விழிப்புணர்வு அளவை அதிகரிக்கும் நம்பிக்கையில், கடந்த ஆண்டில் இருந்தே அதிகாரிகள் தங்கள் எச்சரிக்கை தொனியை அதிகரித்துள்ளனர்.

 

மேலும், நாட்டின் தெற்கு நான்கை பள்ளத்தாக்கை 30 ஆண்டுகளுக்குள் கடுமையான பூகம்பம் தாக்க 80% வாய்ப்பு இருப்பதாக ஜனவரி மாதம் ஜப்பானிய அரசாங்கம் எச்சரித்ததிலிருந்து பொதுமக்களிடையே ஒருவகை அச்சம் ஏற்பட்டுள்ளது.

 

ஃபுஜியைச் சுற்றியுள்ள நகரங்களில் வசிப்பவர்கள் தயாராக இருக்குமாறு அதிகாரிகள் நினைவூட்டுவது இது முதல் முறை அல்ல. கடந்த மார்ச் மாதத்தில், முழு வீச்சில் எரிமலை சாம்பல் வெளிப்பட்டால், குடியிருப்பாளர்கள் இரண்டு வாரங்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை சேமிக்குமாறு பரிந்துரைக்கும் வழிகாட்டுதல்களை அரசாங்கம் வெளியிட்டது.

 

மேலும், பெரிய அளவிலான வெடிப்பு ஏற்பட்டால் 1.7 பில்லியன் கன மீற்றர் எரிமலை சாம்பலை உருவாக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மட்டுமின்றி, இது சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பிற நிலப்பகுதிகளில் சுமார் 490 மில்லியன் கன மீற்றர்கள் குவியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஃபுஜி வெடிப்பால் ஏற்படும் பொருளாதார இழப்பு என்பது 16.6 பில்லியன் அமெரிக்க டொலர் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்