ரஷ்யாவின் மிகக் கொடிய தாக்குதல் - கடும் கோபத்தில் ஐரோப்பிய தலைவர்கள்

29 ஆவணி 2025 வெள்ளி 07:41 | பார்வைகள் : 441
உக்ரைன் தலைநகர் கீவ் மீதான ரஷ்யாவின் மிகக் கொடிய தாக்குதலில் சிறார்கள் உட்பட 23 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகம் தாக்கப்பட்டுள்ளது ஐரோப்பிய தலைவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார்.
உக்ரைன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள தகவலில், 4 சிறார்கள் உட்பட 23 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்றும், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகம் மற்றும் அருகிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவையும் சேதமடைந்தன.
ரஷ்யா கிட்டத்தட்ட 600 ட்ரோன்கள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக உக்ரைன் படைகள் தெரிவித்தன.
உக்ரைன் தலைநகர் மீது இந்த மாதத்தில் ரஷ்யா முன்னெடுக்கும் மிகக் கொடிய தாக்குதல் இதுவென்றே கூறப்படுகிறது.
ரஷ்யாவின் இந்த கொடூர நடவடிக்கை தற்போது போரை முடிவுக்கு கொண்டுவர முயற்சிகள் முன்னெடுக்கும் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் கொந்தளிக்க வைத்துள்ளது.
ரஷ்யாவின் விளாடிமிர் புடின் அமைதிக்கான நம்பிக்கையை நாசப்படுத்துவதாக பிரித்தானிய பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் தெரிவிக்கையில்,
போரை தீவிரப்படுத்தவும் சமாதான முயற்சிகளை கேலி செய்யவும் வேண்டுமென்றே எடுக்கப்பட்ட ஒரு முடிவு இதுவென தெரிவித்துள்ளார்.
மேலும், ரஷ்யா தனது உண்மையான முகத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஜேர்மன் சேன்ஸலர் பிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்துள்ளார்.