Paristamil Navigation Paristamil advert login

எண்ணுார் அருகே இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி

எண்ணுார் அருகே இரும்பு சாரம் சரிந்து 9 பேர் பலி

1 ஐப்பசி 2025 புதன் 10:14 | பார்வைகள் : 101


சென்னை எண்ணுார் அருகே, சிறப்பு பொருளாதார மண்டல அனல்மின் நிலைய கட்டுமான பணியின் போது, 45 மீட்டர் உயர இரும்பு சாரம் சரிந்து விழுந்து, ஒன்பது தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்த அனைவரும், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகா வாயலுாரில், எண்ணுார் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் தலா, 660 மெகா வாட் திறனில், இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையத்தை மின் வாரியம் அமைத்து வருகிறது.

இதன் கட்டுமான பணிகளை, மத்திய அரசின் பி.எச்.இ.எல்., எனப்படும், 'பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்' நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

திட்டச்செலவு, 7,814 கோடி ரூபாய். கட்டுமான பணி, 2014 செப்., 27ல் துவங்கியது. அங்கு, 42 மாதங்களுக்குள் பணிகளை முடித்து, மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது.

டெண்டரில் பங்கேற்ற ஒரு நிறுவனம், பி.எச். இ.எல்., நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதனால், 2015 செப்., 7 முதல் திட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. பின், உச்ச நீதிமன்றத்தில், மின் வாரியம் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில், மின் வாரியத்திற்கு சாதகமாக தீர்ப்பு வந்ததை அடுத்து, 2016 அக்., 10 முதல் மீண்டும் பணிகள் துவங்கின. எண்ணுார் சிறப்பு மின் நிலையத்தின் முதல் அலகில், 2021 ஏப்ரலிலும், இரண்டாவது அலகில் அந்தாண்டு ஜூனிலும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டது. பணிகள் மிகவும் மந்தகதியில் நடந்தன.

தொடர்ந்து, 2020 மார்ச் முதல் கொரோனா ஊரடங்கால், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினர். இதனால் மின் உற்பத்தி துவங்கப் படவில்லை.

பின், 2022 - 2023ல் பணிகள் மீண்டும் முடுக்கி விடப்பட்டன. தற்போது, 70 சதவீத கட்டுமான பணிகள் முடிந்துள்ளன. வரும் கோடை மின் தேவையை சமாளிக்க, 2026 மார்ச் முதல் மின் உற்பத்தியை துவக்கும் வகையில், மின் நிலைய பணிகளை முடிக்குமாறு, ஒப்பந்த நிறுவனத்துக்கு, மின் வாரியம் உத்தரவிட்டு உள்ளது.

அதன் அடிப்படையில் கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மின் நிலைய வளாகத்தில் உள்ள நிலக்கரி முனையத்தில், 45 மீட்டர் உயரத்திற்கு இரும்பு சாரம் அமைத்து, அதன் மேல், 'ெஷட்' அமைக்கும் பணியில் நேற்று, வட மாநில தொழிலாளர்கள் 15 பேர் ஈடுபட்டிருந்தனர்.

மாலை, 5:30 - 5:40 மணியளில், திடீரென சாரத்தில் இருந்த கம்பிகள் சரிந்ததால், அதன் மேல் பணி புரிந்த, 10 தொழிலாளர்கள் கீழே விழுந்தனர். அவர்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்தனர். அவர்களை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஒருவர் பலத்த காயத்துடன், சிகிச்சை பெற்று வருகிறார்; சம்பவ இடத்தில் இருந்த ஐந்து பேர் உயிர் தப்பினர்.

'இறந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில், தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும். அவர்களது உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

யார் யார்?

விபத்தில் உயிழந்த ஒன்பது பேரும், அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற விபரம் தெரிய வந்துள்ளது. அவர்கள் விபரம்: முன்ன கேம்ப்ரல், 32, விதாயும் பிரவோட்சா, 35,

சுமன் கரிகாப், 36,

தீபக்ராய் ஜுங், 38,

சர்போனிட் தவுசன், 32,

பிராண்டோ சோரங், 35,

பாபன் சோரங், 36, பாய்பிட் போக்ளோ, 29, பீமராஜ் தவுசன், 34,

என, ஒன்பது பேரும் உயிரிழந்துள்னர். மேலும், ஒருவர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்