கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள்
18 கார்த்திகை 2020 புதன் 06:09 | பார்வைகள் : 9338
ஒவ்வொரு நாளும் ஏதோ ஒன்றுக்காக கோபப்படுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளோர் நம்மில் பலர். அனால் நம்முடைய கோபத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியுமா என்றால் கேள்விக்குறி தான். உதாரணமாக தந்தையின் கோபத்திற்கு பயந்து ஊர் சுற்றும் மகனும் திருந்தப்போவதில்லை. எடையை குறைத்து போடும் கடைக்காரரும் திருந்தப்போவதில்லை.
மாறாக அவர்கள் எப்போது தாங்கள் செய்வது தவறு என்று உணருகிறார்களோ அப்போது தான் அவர்களால் திருந்த முடியும். அதுவரை தவறு செய்பவர்கள் யார் மீது கோபப்பட்டாலும் அதனால் கோபப்படுபவரின் உள்ளம் வெந்து, கண்கள் சிவந்து, வயிறு எரிய கோபம் கொள்ளும் போது ஏற்படும் அதிக ரத்த அழுத்தத்தால் கோபப்படுபவரின் உடல் நலன் தான் கெட்டுப்போகும். ஆகவே கோபம் வராமல் தடுக்க என்னென்ன வழிமுறைகள் உண்டு என்பதை இங்கு பார்க்கலாம்.
உங்களுக்கு கோபம் வரும் போது தயவு செய்து ஒரு முறை உங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன் நின்று உங்கள் உருவத்தை பாருங்கள். முகம் அஷ்ட கோணலாகி , கண்கள் சிவந்து நீர் வழிய, மூக்கு விடைக்க, நரம்பு வெளியே தெரிய நீங்களே விரும்பாத உங்கள் முகத்தை உங்களை சுற்றி உள்ளவர்கள் எப்படி சகித்துக்கொள்வார்கள் என்று ஒரு கணம் சிந்தித்து இருக்கிறீர்களா?
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு கோபம் வருவது குறைவாக இருக்கலாம். ஏனென்றால், அவர் தன் மீது எப்போதும் இறைவன் பார்வை விழுந்து கொண்டே இருக்கிறது என்று நினைக்கிறார். அதனால் கோபம் குறைகிறது. கோபங்களை குறைத்துக்கொள்ள ஆன்மிகம், யோகா, தியானம் போன்ற ஞான மார்க்கத்தில் ஈடுபட்டால் கோபம் வருவது குறையும். ஆனால் இதிலும் மனதை அடக்க தெரிந்தவர்களுக்கே சாத்தியம்.
அதே போல் மறதி பல உறவுகளுக்கு பாதையை அமைக்கும். இதனால் தான் நமது பெரியவர்கள் சொன்னார்கள். “குற்றம் பார்க்கின் சுற்றும் இல்லை” என்று? மாமியாரின் குத்தல் பேச்சுகளை மருமகள் மறந்தால் தான் வீட்டில் அமைதி நிலைக்கும். கணவனின் கோமாளித்தனத்தை மனைவி மறந்தால் தான் இல்லறம் நல்லறமாகும். அதே போல் மனைவியின் முட்டாள் தனத்தை மறந்தால் தான் அங்கு அன்பு துளிர்க்க ஆரம்பிக்கும். இப்படி ஒருவர் மேல் ஒருவர் வரும் கோபத்தை மறப்பதுடன் அவரை மன்னித்தால் அவரும் திருந்துவார். அங்கே அன்பும், சமாதானமும் நிலைக்கும். இதனால் ஏட்டிக்கு போட்டி நான் தான் பெரியவன், எனக்கு தான் எல்லாம் தெரியும், இது என்னால் மட்டும் தான் முடியும் என்ற சுயநலம் பறந்தோடி உறவுக்கு உயிர்கொடுக்கும்.
ஒருவரை ஒருவர் மன்னிப்பதால் அங்கே அமைதி நிலைத்து நிற்கும். அராஜகமும், தீவிரவாதமும் விரட்டி அடிக்கப்படும். இதைத்தான் கவிஞன் ஒருவன் கூறுகிறான். மண்ணில் மன்னிக்க தெரிந்தவன் மகாத்மா ஆகிறான் என்று. இதே கருத்தைத்தான் அனைத்து மதங்களும் எடுத்துரைக்கின்றன. அறிவியல் விந்தைகள் நிகழ்ந்து வரும் இந்த காலத்தில் மன்னிப்பு என்ற கேடயத்தை நாம் கையில் வைத்திருந்தால் , கோபம், துன்பம் என்ற அரக்கர்கள் நம்மை அணுகமாட்டார்கள்.